Images
  • drugs

போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிரடிச் சோதனை எப்படி நடக்கிறது?

சிங்கப்பூர்: சூரியன் உதிக்கும் முன்னரே மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் அதிரடிச் சோதனைகளைத் தொடங்கி விடுகின்றனர்.

புதன்கிழமை (10 அக்டோபர்) நடந்த அதிரடிச் சோதனையில் அதிகாரிகளுடன் சென்றார் சேனல் நியூஸ்ஏஷியாவின் காயா சந்திரமோகன்.


அதிகாலை 5.30மணிக்குச் சோதனைக்காகச் சந்தித்தனர் அதிகாரிகள். மறைமுகமாக நடத்தப்படும் சோதனையைப் பற்றி கலந்து பேசிய பின் சோதனை இடத்திற்குச் சென்றனர்.


தெக் வாய் பகுதியில் வீடமைப்புப் பேட்டையில் சற்று நேரம் கார்களில் மறைந்திருந்தனர் சில அதிகாரிகள். சுற்றும் முற்றும் அதிகாரிகள் பதுங்கி இருந்தாலும் அவர்கள் நிருபரின் கண்களில் சிக்கவில்லை.

ஊரே தூங்கும் வேளையில், சந்தேக நபரைக் கையும் களவுமாகப் பிடிக்க அவர்கள் காத்திருந்தனர்.

சுமார் 7 மணிக்குச் சோதனையைத் தொடங்கலாமெனக் காரில் இருந்த அதிகாரிகளுக்கு சமிக்ஞை கிடைத்தது.


புளோக்கின் மாடிக்குச் சென்றனர் அவர்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் முகமூடிகள், உடல் கவசங்களை அணிந்து தயாராயினர்.

சந்தேக நபரின் வீடு ஒரு சில மாடிகளுக்குக்கீழ் இருந்தது. படிகளின் வழியாக அதிகாரிகள் கீழ்மாடிக்கு விரைந்தனர்.

கதவை இடித்து அவர்கள் வீட்டினுள் நுழைகின்றனர்.

அப்போது பெரிய பொருள் ஒன்று மாடியிலிருந்து கீழே விழும் சத்தம் கேட்கிறது.


அதிகாரிகள் 63-வயது ஆடவரைக் கைது செய்கின்றனர். அவர் வீட்டிலிருந்து சன்னல் வழியாக எறிந்த பெரிய பொட்டலம் ஒன்று கீழே புல் தரையில் கிடப்பது தெரிகிறது.

அதிகாரிகள் கீழே சென்று பொட்டலத்தைச் சோதனையிட்டு அதைப் பறிமுதல் செய்கின்றனர்.

பின்னர் அது 1.3 கிலோகிராம் எடையுள்ள போதைமிகு அபின் எனத் தெரியவருகிறது.


சந்தேக நபருடைய வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், மேலும் 876 கிராம் போதைமிகு அபின், 29 கிராம் ஐஸ் போதைப் பொருள்,
87,000 வெள்ளி ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.


அவற்றின் மொத்த மதிப்பு, 154,000 வெள்ளி.

10 விநாடிகளே நீடித்த அதிரடிச் சோதனைக்கு அதிகாரிகள் வாரக் கணக்கில் திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டியதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டியது.  

Top