Images
  • Drugs
    (படம்: CNB)

$45,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல், 4 பேர் கைது


(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

சிங்கப்பூரில் கடந்த இரு நாட்களில் 45,000 வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதோடு அதன் தொடர்பாக 4 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முதல் நபர் உட்லண்ட்ஸ் ஸ்டிரீட் 13இல் நேற்றுக் கைதுசெய்யப்பட்டதாக மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு கூறியது.

அந்த 38 வயது ஆடவர் வீசிய பையிலிருந்து 276 கிராம் எடை கொண்ட 'Ice' போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

அவருடைய வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 80 எக்ஸ்டசி மாத்திரைகள், மூன்று எரிமின்-5 மாத்திரைகள், 2 கிராம் ஐஸ் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

மற்றுமோர் ஆடவர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிகாரிகளிடம் பிடிபட்டார்.

முதல் நபரை உட்லண்ட்ஸில் சந்தித்ததாக நம்பப்படும் அந்த 31 வயது மலேசிய ஆடவரிடமிருந்து 5,100 வெள்ளி ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் விசாரணையைத் தொடர்ந்து இன்னும் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

அந்த 21 வயது, 25 வயது சிங்கப்பூரர்களும் முதலாம் நபருடன் தொடர்புகொண்டவர்கள் என்று நம்பப்படுகிறது.

அவர்களுடைய வாகனத்திலிருந்து 1,212 கிராம் கஞ்சாவும் 80 எக்ஸ்டசி மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

விசாரணைகள் தொடர்வதாக மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

Top