Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'COVID-19 பரவலைக் கட்டுப்படுத்த இணையம் வழி கற்றல் அவசியம். ஆனால் சிரமங்களும் உண்டு': மாணவர்கள்

இணையம் வழி கற்றல் தற்போதைய COVID-19 நெருக்கடி நிலைக்கு அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றாலும் வழக்கமான பாடங்களுக்கு அது ஈடாகாது என்கின்றனர் பல்கலைக்கழக மாணவர்கள்.

வாசிப்புநேரம் -


இணையம் வழி கற்றல் தற்போதைய COVID-19 நெருக்கடி நிலைக்கு அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றாலும் வழக்கமான பாடங்களுக்கு அது ஈடாகாது என்கின்றனர் பல்கலைக்கழக மாணவர்கள்.

COVID-19 பரவலைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் இணையம் வழி கற்றல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதனைப் பற்றி மாணவர்களிடம் கேட்டது 'செய்தி':

சில மாணவர்கள் இணையம் வழி கற்றலை வரவேற்கின்றனர்.



விருப்பமான நேரத்தில் விரிவுரையைப் பார்க்கலாம். வகுப்புக்குச் செல்லும் நேரம் எனக்கு மீதமாகிறது. அன்றைய பாடத்தை அன்றே படித்துமுடித்துவிட வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருக்கவேண்டும். 

என்று கூறுகிறார் நன்யாங் தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர் ராமசாமி.


எனது பல்கலைக்கழகத்தில் 50க்கு அதிகமான மாணவர்கள் உள்ள விரிவுரைகள் இணையம் வழி ஒளிபரப்பாகுமாறு மாற்றப்பட்டுள்ளன. இது எனக்கு உதவியாக உள்ளது. சிரமமான பாடங்களை மெதுவாகப் படிக்க உதவியாக இருக்கிறது. விரிவுரையாளர்களும் நல்ல புரிந்துணர்வுடன் செயல்படுகின்றனர். இணையம் வழி அவர்களிடம் பாடங்களைக் கொடுக்கிறோம். 

என்றார் தேசியப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர் செம்யுவெல்.

தற்போது கொரோனா கிருமித்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இணையம் வழி கற்றல் முக்கியம் என்பதைப் பெரும்பாலான மாணவர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

ஆனால் வழக்கமான வகுப்புகள் இல்லாததால் சில சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.



சுமார் இரு வாரங்களாக இணையம் வழியாக விரிவுரைகள் ஒளிபரப்பாவதற்கு மாறியுள்ளோம். விரிவுரை வகுப்புகள் போன்று கூட்டமான இடங்களைத் தவிர்ப்பது கிருமிப் பரவலைச் சமாளிக்க முக்கியம். ஆனால் வகுப்புக்குச் செல்லும் அனுபவம் இல்லாதது குறையாக உள்ளது. மாணவர்கள், ஆசியர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடும் வாய்ப்பு இல்லாதது கவலையாக இருக்கிறது. 

என்றார் தேசியப் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பயிலும் காவ்யா தீனன்.


COVID-19 பரவி வரும் நிலையில் பள்ளிக்குப் பயணம் செய்வது கொஞ்சம் பயம் தந்தது. அதனால் இணையம் வழி பாடங்களைக் கற்பது நல்லது. ஆனால் பாடங்களில் ஐயங்களை உடனுக்குடன் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும் ஆசிரியர்கள் முடிந்தவரை எங்களுக்கு உதவுகின்றனர். அதிகமான கூட்டத்தைத் தவிர்க்க சிறு குழுக்களில் சந்தித்து எங்களுக்கு உதவுகின்றனர்.

என்ற தேசியப் பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவர் பிரியன் ராஜமோகன், தம் பல்கலைக்கழகத்தின் முன்னச்சரிக்கை நடவடிக்கைகளைப் பாராட்டவும் செய்தார்.


தற்போது COVID-19 பரவல் காரணமாக குறுகிய காலத்துக்கு அறிமுகமாகியுள்ள இணையம் வழி கற்றல் மிகப் பொருத்தமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை. ஆனால் சக நண்பர்களுடன் படிக்கும்போது அதில் தனி மகிழ்ச்சி உள்ளது. அதோடு ஆசிரியர்களின் கண்காணிப்பும் கூடுதலாகக் கிடைக்கிறது. 

என்றார் முதலாம் ஆண்டு நன்யாங் தொழில்நுட்பக் கல்லூரி மாணவி வைஷ்ணவி.

எனது பல்கலைக்கழகத்தில் வகுப்பில் கலந்துரையாடல் மூலமாகவும் மாணவர்கள் மதிப்பிடப்படுவார்கள். இணையத்தின் வழி கற்கும்போது இது பாதிக்கப்படுகிறது. 

என்கிறார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் துர்கா தேவி.




 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்