Images
  • people

ஊழியர்களின் சம்பள பாக்கி 29 மில்லியன் வெள்ளி மீட்கப்பட்டுள்ளது-மனிதவள அமைச்சு

சிங்கப்பூரில் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சென்ற ஆண்டு இறுதிவரை, ஊழியர்களின் சம்பள-பாக்கியாகச் சுமார் 29 மில்லியன் வெள்ளியை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

அதே காலக்கட்டத்தில் சம்பளம் தொடர்பில் செய்யப்பட்ட ஏறக்குறைய 15,000 புகார்களின் ஒரு பகுதியாக அந்தத் தொகை மீட்கப்பட்டுள்ளது.

மனிதவள அமைச்சும், பூசல்களுக்குத் தீர்வுகாணும் முத்தரப்புக் கூட்டணியும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

திரு. கிறிஸ்டோப் லெ யோயங் (Christophe Le Yoanc) வர்த்தகச் சந்தை ஆய்வு நிறுவனமொன்றில் கணக்கியல் இயக்குநராகப் பணிபுரிந்தார்.

சென்ற ஆண்டு அக்டோபரில் அவருக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை.

கூடிய விரைவில் சம்பளம் கொடுக்கப்படும் என்று நிறுவனம் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உறுதியளித்திருந்தது.

ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகும் அது சம்பளத்தை வழங்கவில்லை.

அன்றாடச் செலவுகளுக்கும், கட்டணங்களைச் செலுத்தவும் சிரமத்தை எதிர்நோக்கியதாகத் திரு. லெ யோயங் கூறினார்.

நிரந்தரவாசியான அவர் முத்தரப்புக் கூட்டணியை அணுகினார்.

சில மாதங்களுக்குப் பிறகு அவரது சம்பளம் மீட்கப்பட்டதாகத் தகவல் கிடைத்தது.

அவருடையதையும் சேர்த்து, ஊழியர்களுக்குத் தரப்படாத சம்பளமாக, சுமார் 88 விழுக்காட்டுத் தொகை மீட்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பெரும்பாலும் வெளிநாட்டு ஊழியரிடையே சம்பள பாக்கிப் பிரச்சினை காணப்பட்டது. 60 விழுக்காட்டுப் புகார்கள் கட்டுமானத்துறையிலிருந்து பெறப்பட்டன.

நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத் தொகை விவரங்களை வெளியிடவேண்டியது கட்டாயம் என்று இந்த ஆண்டு ஜனவரியில் அரசாங்கம் அறிவித்தது.

மேம்பட்ட முறையில் நிறுவனங்களைக் கண்காணிக்க அது உதவுவதாக முத்தரப்புக் கூட்டணி குறிப்பிட்டது.

Top