Images
  • gavel
    ( படம்: AFP )

HIV தொற்று இருப்பதை மறைத்து ரத்த தானம் கொடுத்த ஆடவருக்கு சிறை, அபராதம்

HIV தொற்று இருப்பதை மறைத்து தன் சக ஊழியர்களுடன் இணைந்து ரத்த தானம் கொடுத்த ஆடவருக்கு 4 மாத சிறைத் தண்டனையும், 10,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த 58 வயது ஆடவர் கடந்த ஆண்டு மே மாதம் ரத்த தானம் கொடுத்துள்ளார்.

அப்போது அதற்குரிய படிவத்தில் தம்முடைய பாலியல் நடவடிக்கைகள் பற்றிப் பொய்யான தகவல்களைக் கொடுத்துள்ளார்.

பிறகு தானம் கொடுக்கப்பட்ட ரத்தம் சோதிக்கப்பட்டதில் ஆடவரின் ரத்தத்தில் HIV தொற்று இருப்பது தெரியவந்தது.

ஆடவர் முன்னர், 9 முறை ரத்த தானம் செய்ததாகவும், 10 ஆண்டுகளுக்கு முன்னர் அவர், கடைசியாக HIV தொற்றுச் சோதனையைச் செய்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பிறர் பாதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் HIV தொற்று உள்ள ரத்தத்தை ஆடவர் தானம் செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ரத்தம் தொடர்பான பொய்த் தகவல்களை கொடுப்போருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ, 20,000 வெள்ளி வரை அபராதமோ, இரண்டுமோ விதிக்கப்படலாம்.


 

Top