Images
  • hawker centre

தீச்சம்பவம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் ? பயிற்சியில் ஈடுபட்ட உணவங்காடிக்காரர்கள்

வெஸ்ட் கோஸ்ட் மார்க்கெட் ஸ்குவேரில் (West Coast Market Square) உள்ள உணவங்காடிக்காரர்கள், தீச்சம்பவம் ஏற்பட்டால் எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.

பயிற்சியில் சுமார் 42 உணவங்காடிக்காரர்கள் கலந்துகொண்டனர்.

வெஸ்ட் கோஸ்ட் உணவங்காடிக்காரர்கள் அமைப்புடன் இணைந்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

சென்ற பிப்ரவரி மாதம் தெலுக் பிளாங்கா உணவங்காடியில் தீச்சம்பவம் ஏற்பட்டது.

மார்ச் மாதம் நியூட்டன் உணவங்காடியில் அதே போன்று நடந்தது.

இத்தகைய சம்பவங்கள் எப்போது வேண்டுமோ எங்கு வேண்டுமோ நடக்கலாம். அதனால் தயார்நிலையில் இருப்பது அவசியம்; குறிப்பாக நெருப்பு, சூடான பொருள்கள் ஆகியவற்றைக் கையாளும் உணவங்காடிக்காரர்கள், தீயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளை அறிந்திருப்பது அவசியம் என்றார் இன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன்.

தீப் பற்றிக்கொண்டவுடன் அதனை எப்படி அணைப்பது என்பதைக் குடியிருப்பாளர்களும், உணவங்காடிக்காரர்களும் கற்றுக்கொண்டனர்.

பயிற்சியை முடித்ததற்கு அடையாளமாக அவர்களுக்குத் தீயணைப்புக் கருவி ஒன்று வழங்கப்பட்டது.

அடுத்த 5 மாதங்களுக்குள், வெஸ்ட் கோஸ்ட் மார்க்கெட் ஸ்குவேரில் உள்ள 195 உணவங்காடிக்காரர்களுக்கும் பயிற்சியை வழங்குவது திட்டம்.

 

Top