Images
  • crime
    (படம்: Today)

வாணவேடிக்கைகளை வெடிக்கச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நால்வர் கைது

யீஷூன், புக்கிட் பாத்தோ, ஜூ சேங் ஆகிய இடங்களில் வாணவேடிக்கைகளை வெடிக்கச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முதல் சம்பவத்தில், யீஷூன் ஸ்ட்ரீட் 51இல் உள்ள புளோக் ஒன்றுக்கு அருகே இருக்கும் திறந்தவெளியில் வாணவேடிக்கைகளை வெடித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

பலத்த சத்தம் குறித்து தகவல் கிடைத்ததாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெடிபொருள் கொண்ட கலன் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. அதன் தொடர்பில் 28 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டார்.

இன்னொரு சம்பவத்தில் புக்கிட் பாத்தோ வெஸ்ட் அவென்யு ஆறின் புளோக் ஒன்றின்கீழ் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. விசாரணையைத் தொடர்ந்து ஆடவர்கள் இருவர் கைதாகினர். அவர்களின் வயது 18,54.

மேலும் ஒரு சம்பவத்தில், ஜூ செங் ரோட்டில் இரவு 9.55 மணியளவில் பலத்த சத்தம் கேட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது. அதன் தொடர்பில் 25 வயது ஆடவர் கைதாகியதாகக் காவல்துறை தெரிவித்தது.

ஆபத்தான வாணவேடிக்கைகளை வெடிக்கச் செய்ததாக 4 பேர்மீதும் குற்றம் சுமத்தப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஈராண்டுவரை சிறைத்தண்டனையோ ஈராயிரம் முதல் பத்தாயிரம் வெள்ளிவரை அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

ஆபத்தான வாணவேடிக்கைகளை வைத்திருப்பது, விநியோகிப்பது, விற்பனை செய்வது போன்ற செயல்கள் குற்றமாகும் எனப் பொதுமக்களுக்குக் காவல்துறை நினைவூட்டியது.

 

Top