Images
  • Food Agency
    (படம்: TODAY/Don Wong)

உணவுப்பொருள்களின் பாதுகாப்பை, சுகாதாரத் தரத்தை உறுதிசெய்ய புதிய கழகம்

உணவுப்பொருள்களின் பாதுகாப்பையும், சுகாதாரத் தரத்தையும் உறுதிசெய்ய சிங்கப்பூர் உணவு அமைப்பு என்ற புதிய ஆணைபெற்ற கழகம் அமைக்கப்படவிருக்கிறது.

அதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் இன்று அங்கீகரிக்கப்பட்டது.

வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம், தேசியச் சுற்றுப்புற அமைப்பு, சுகாதார அறிவியல் ஆணையம் ஆகிய மூன்று அமைப்புகள் தற்போது உணவு தொடர்பான வெவ்வேறு அம்சங்களைக் கையாண்டு வருகின்றன.

இந்த அம்சங்களை ஒன்றிணைக்கும் நோக்கில் சிங்கப்பூர் உணவு அமைப்பு தொடங்கப்படும்.

உணவுப் பாதுகாப்பு, உணவின் சுகாதாரத் தரத்திற்கான விதிமுறைகள், உணவு விநியோகம் தொடர்பான விவகாரங்களைச் சுற்றுப்புற அமைப்பு கையாளும்.

சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, அதனைத் தெரிவித்தார்.

வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து, வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் கலைக்கப்படும்.

ஆணையத்தின் கீழ் இருந்த கால்நடைகள் தொடர்பான பொறுப்புகளை தேசியப் பூங்காக் கழகம் எடுத்துக்கொள்ளவிருக்கிறது.

கழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் பற்றிய ஒரு தனி மசோதாவும்^ இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதன்படி, கழகத்தின்கீழ் AVS என்ற புதிய விலங்குநல மருத்துவச் சேவைப் பிரிவு தொடங்கப்படும்.

கால்நடைகள் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் அந்தப் பிரிவு கையாளும்.

 

Top