Images
  • mandarin orchard
    படம்:  Google Street View

Mandarin Orchard ஹோட்டலில் நச்சுணவுச் சம்பவம் - 42 பேர் பாதிப்பு

Mandarin Orchard Singapore ஹோட்டலின் நச்சுணவுச் சம்பவத்தால் 42 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். அதில் நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று (டிசம்பர் 2) பரிமாறப்பட்ட மதிய உணவை அவர்கள் உட்கொண்டனர்.

சுகாதார அமைச்சு, தேசியச் சுற்றுப்புற அமைப்பு, வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் ஆகியவை இணைந்து சம்பவத்தை விசாரித்து வருவதாக சேனல் நியூஸ்ஏஷியாவிடம் தெரிவித்தன.

இரைப்பைக் குடலழற்சியால் (gastroenteritis) 42 பேர் பாதிக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

நிலைமையைக் கண்காணித்துவருவதாகவும், பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளைச் செய்துவருவதாகவும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்தது.

சம்பவத்தன்று உணவைக் கையாண்ட ஹோட்டல் ஊழியர்கள் தற்காலிகமாகப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவப் பரிசோதனையில் அவர்கள் நலமாக இருப்பது உறுதிசெய்யப்பட்ட பிறகே அந்த ஊழியர்கள் பணிக்குத் திரும்புவர்.

விசாரணை நடைபெறும் காலத்தில், சமைக்கப்படாத உணவைப் பரிமாறும் நடவடிக்கை நிறுத்திவைக்கப்படும் என்று ஹோட்டல் நிர்வாகம் கூறியது. 

Top