Images
  • Food Poisoning
    (படம்: Mum's Kitchen Catering website)

நோய்வாய்ப்பட்ட 39 பேர்- இரு உணவு விநியோக நிறுவனங்களுக்குத் தற்காலிகத் தடை


இரு நச்சுணவுச் சம்பவங்களில் 39 பேர் நோய்வாய்ப்பட்டதைத் தொடர்ந்து, இரு உணவு விநியோக நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

Mum’s Kitchen Catering, Cherish Delights ஆகிய இரு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்டவர்களுக்கு நச்சுணவு பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டதாக சிங்கப்பூர் உணவு அமைப்பும், சுகாதார அமைச்சும் இணைந்து வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

காலவரையறையின்றி இரு நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிடோக் நார்த் (Bedok North) வட்டாரத்தில் அமைந்துள்ள ஷிமேய் ஈஸ்ட் கிட்சன் (Shimei East Kitchen) கட்டடத்தில் இரு நிறுவனங்களும் உணவு தயாரித்து வந்தன.

நிறுவனங்களில் உணவு தயாரிக்கும் ஊழியர்கள் மீண்டும் அடிப்படை உணவுச் சுகாதாரப் பியற்சியை மேற்கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் சான்றிதழ் பெற்ற பின்னரே அவர்கள் உணவுத் தயாரிப்பில் ஈடுபடலாம்.

சிங்கப்பூர் உணவு அமைப்பு, சுற்றுச்சூழல் பொதுச் சுகாதாரச் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்தாண்டு ஷிமேய் ஈஸ்ட் கிட்சனில் அமைந்துள்ள மற்ற இரு நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்ட சுமார் 150 பேர் நோய்வாய்ப்பட்டனர்.


 

Top