Images
  • Fruit Plucking
    (படம்: CNA)

சமூகத் தோட்டங்களிலிருந்து பழத்தை எடுத்தாலும் அபராதம் விதிக்கப்படுமா?


சிங்கப்பூரில் அரசாங்க நிலத்தில் உள்ள மரங்களிலிருந்து அனுமதியின்றிப் பழங்களைப் பறித்தாலோ எடுத்தாலோ அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் சமூகத் தோட்டங்களில் உள்ள பழங்களுக்கும் அது பொருந்துமா? அதுகுறித்து சமூகத் தோட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் சிலரிடம் பேசியது, 'செய்தி'.

பொதுவாகச் சமூகத் தோட்டத்தில் விளையும் பழங்கள், மூலிகைகள் மக்களுடன் பகிர்ந்துகொள்ளப்படும். சில நேரங்களில் மக்களே வந்து எடுத்துக்கொண்டு செல்கின்றனர். உட்லண்ட்ஸில் அமைந்துள்ள எங்கள் Bees and Blooms சமூகத் தோட்டத்தில் இருக்கும் வேலி போடப்பட்டுள்ள இடத்தில் உள்ள பழங்களை எடுக்க அனுமதி இல்லை. அவை மாணவர்களுக்குக் கற்றல், போட்டி, திட்டப்பணி ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. வேலிக்கு வெளியே உள்ள பகுதியில் கறிவேப்பிலை, வாழையிலை ஆகியவற்றை அக்கம்பக்கத்தார் பொறுப்புடன் எடுத்துக்கொள்ளலாம். தேவையானதை மட்டும் எடுத்துக்கொள்வது அனுமதிக்கப்படுகிறது.

- லலிதா, Community in Bloom தூதர்

எங்கள் சமூகத் தோட்டத்தில் 70% கீரை வகைகளும் காய்கறிகளும் விளைகின்றன. அங்கு மாதந்தோறும் ஒன்றுகூடல் நடைபெறும். அப்போது குடியிருப்பாளர்கள் தொகை செலுத்தி தங்களுக்கு விருப்பமானவற்றை அறுவடை செய்து கொள்ளலாம். மற்ற நேரங்களில் அவர்கள் அவ்வாறு செய்ய முடியாது.

- ஹனிதா ஸ்ரீநிவாசன், ஹவ்காங் zone 8 குடியிருப்பாளர்க் குழு உறுப்பினர்.

சில வட்டாரங்களில் மொத்தமாக அறுவடை செய்யப்பட்டு, விளைச்சல் குடியிருப்பாளர்களுக்குச் சமமாகப் பங்கீடு செய்யப்படுகிறது. 

சில குடியிருப்புப் பகுதிகளில், சமூகத் தோட்டங்கள் ஓராண்டு குத்தகையாக விண்ணப்பம் செய்யும் சில வட்டாரவாசிகளுக்குக் கொடுக்கப்படுகிறது. அந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் விளைச்சலை எடுத்துக்கொள்ளலாம்.

செய்தியிடம் பேசிய வேறு சில குடியிருப்பாளர் குழுக்கள் அவ்வாறு தெரிவித்தன.

இது தொடர்பான நடைமுறை வட்டாரத்துக்கு வட்டாரம் வேறுபடுகிறது.  

Top