Images
  • G1
    படங்கள்: கணேஷா

10,000 வெள்ளி ! 9 மாதம் ! 23 நாடு! விமானம் ஏறாமல் உலகம் சுற்றிய சிங்கப்பூர் வாலிபர்

விமானம் ஏறாமல் சிங்கப்பூரில் இருந்து கனடா சென்றுள்ளார் ஒருவர்... ஆம் உண்மை தான்!

2018ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி அந்தப் பயணத்தைத் தொடங்கினார் 20-வயது சிங்கப்பூரர் செல்வ கணேஷா மூர்த்தி பாலகிருஷ்ணன்.


இரண்டு வருட தேசிய சேவையை முடித்த கணேஷா வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள எண்ணினார்.

அந்த எண்ணம் அவரை 23 நாடுகளைத் தாண்டவைத்தது, அதற்கு எடுத்த காலம் 9 மாதம், செய்த செலவு சுமார் 10,000 வெள்ளி.

இதே ஆச்சரியத்துடன் கனடாவில் உள்ள கணேஷாவிடம் கேள்விகளைக் கேட்டது "செய்தி"

எதற்காக இந்த விமானம் ஏறாத பயணம் ?

சிறு வயதில் பயணம் தொடர்பான நிகழ்ச்சிகளை அதிகமாகப் பார்ப்பேன், ஒரு நிகழ்ச்சியில் சிங்கப்பூரில் இருந்து ஒருவர் சாலை வழியாக பிரிட்டன் செல்வார், அது என் ஆழ்மனத்தில் பதிந்தது, அதைப் போல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.

தகுந்த நேரம் கிடைத்தது பயணத்தை தொடங்கிவிட்டேன்.


பயணத் திட்டத்தை எப்படி முடிவு செய்தீர்கள் ?

எந்தத் திட்டமும் போடவில்லை. மலேசியா, தாய்லந்தைக் கடக்க வேண்டும் என்று முதலில் திட்டமிட்டேன். அதன் பின்பு கால்போன போக்கில் பயணம் போனது.

விசா தேவை என்பதால் இந்தியா, பாகிஸ்தான் வழி செல்லவில்லை. அதனால் சீனா சென்று மத்திய ஆசிய நாடுகள் வழி ஐரோப்பாவிற்குள் நுழைந்தேன்.

என்னென்ன சவால்களைச் சந்தித்தீர்கள் ?

சொந்த பாதுகாப்புக்காகச் சிறிய கத்தி ஒன்று வைத்திருந்தேன், சீனாவின் ரயில் நிலையத்தில் சோதனையின் போது அதிகாரிகள் அதைக் கண்டு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தினர்.

டகேஸ்தானில் வீட்டு உரிமையாளர் ஒருவர் என்னை அடைத்து வைத்தார். அவரிடம் இருந்து தப்பி ஓடினேன்.

ஈரானில் இருந்தபோது அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் போர் ஏற்படும் சூழல் நிலவியது. அது நகரையே பதற்றத்தில் தள்ளியது, ரமதான் மாதம் என்பதால் மதிய உணவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

சில நேரம் சாலையில் மணிக்கணக்காக வண்டிகளுக்காகக் காத்திருந்தேன், சில முறை மக்கள் உதவ முன்வரவில்லை, கடுமையான வெப்பம், குளிர் போன்றவை சவாலாக இருந்தன.

மொழி ஒரு சவாலாக இல்லை, ரஷ்ய, ஆங்கில மொழிகள் தெரிந்ததால் வசதியாக இருந்தது.


எந்த நாடு உங்களுக்கு பிடித்திருந்தது ?

மத்திய ஆசிய நாடுகள் என்னைக் கவர்ந்தன. அவர்களின் கலாசாரம், உணவு வித்தியாசமாக இருந்தது.

ஈரானிய மக்கள் அன்பாக நடந்துகொண்டார்கள், பல முறை உணவுக்குப் பணம் வாங்கவில்லை.

பணம் போதுமானதாக இருந்ததா ?

எனது பயணத்தில் அதிகச் செலவு வடகொரியாவில் தான். அங்கு தங்கிய ஒரு வாரத்திற்கு மட்டும் சுமார் 1,500 வெள்ளி செலவானது.

எனது பயணத்தைப் பார்த்து பல இடங்களில் மக்கள் என்னிடம் வாடகை வாங்கவில்லை. உணவையும் இலவசமாகக் கொடுத்து வழியனுப்பினர்.

எந்த இடத்திலும் உடல்நலக் கோளாறு ஏற்படாதது பெரும் நிம்மதியைத் தந்தது.


இந்தப் பயணம் கற்றுக்கொடுத்த பாடம் ?

மனதைரியம் இருந்தால் போதும் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கண்ணோட்டம் உண்டு அதனால் யாரையும் தவறாக நினைக்க வேண்டாம்.

உலகம் அழகானது அன்பானது.


மீண்டும் இதுபோல் செய்யத் திட்டம் உள்ளதா ?

கனடாவில் இருந்து சிங்கப்பூருக்கு இருசக்கர வாகனத்தில் வரத் திட்டம் உள்ளது.

அடுத்த ஆண்டு கியூபாவை சைக்கிளில் சுற்றிவர எண்ணம் கொண்டுள்ளேன்.

சாலைப் பயணத்தை ஜெர்மனியில் முடித்த கணேஷா, அங்கிருந்து கப்பலில் அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் இருந்து சாலை மூலம் கனடாவிற்குள் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி நுழைந்து பயணத்தை முடித்தார்.

கணேஷா அவரின் பயண அனுபவத்தை ‘The Long Direction’ என்று ஒரு புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். 

Top