Images
  • halimah yacob
    (படம்: Hani Amin)

சிங்கப்பூரின் நிதி இருப்பு விதிவிலக்காகச் சில சூழலில் மட்டுமே பயன்படுத்தப்படும் : அதிபர் ஹலிமா

சிங்கப்பூரின் நிதி இருப்பை, எதிர்கால வரவு செலவுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவது விதிவிலக்காகச் சில சூழலில் மட்டுமே இடம்பெறும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.

அரசாங்கம் தற்போதைய தலைமுறையினரைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள விரும்புகிறது, அது, எதிர்காலத் தலைமுறையினருக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

கிருமித்தொற்றுச் சூழலை ஊழியர்கள் எவ்வாறு சமாளித்து வருகின்றனர் என்பதை அறிய, அதிபர் ஹலிமா தொழிற்சங்கத் தலைவர்களுடன் மெய்நிகர்க் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

கோவிட்-19 கிருமிப் பரவல் சூழல் நமது அடிப்படை வாழ்வாதாரத்தைப் பாதித்திருக்கிறது;
இது ஒரு சிக்கலான சூழ்நிலை என்றார் அவர்.

மக்களைப் பார்த்துக்கொள்ள இருப்பிலுள்ள நிதியைப் பயன்படுத்துவதற்கான கட்டாயத் தேவை எழுந்துள்ளது என்றார் திருவாட்டி ஹலிமா.

மக்களின் சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றைக் கவனித்துக்கொள்ளவேண்டும்;

அதே சமயம் அவர்களுக்குத் தொடர்ந்து வருமானம் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்; அது மிகவும் அவசியம் என்றும் அதிபர் ஹலிமா கூறினார்.

 

Top