Images
  • hdb (1)
    ( படம் :Jeremy Long)

தனியார் வீடுகள் குறைந்தகால வாடகைக்கு விடப்பட்டதன் தொடர்பில் 2,000க்கும் அதிகமான புகார்கள் பதிவு

நகரச் சீரமைப்பு ஆணையம், 2015ஆம் ஆண்டுக்கும், 2017ஆம் ஆண்டுக்கும் இடையே, தனியார் வீடுகள் குறைந்தகால வாடகைக்கு விடப்பட்டதன் தொடர்பில் 2,000க்கும் அதிகமான புகார்கள் பதிவானதாகத் தெரிவித்துள்ளது.

அதே காலகட்டத்தில், கழக வீடுகளில் அத்தகைய சம்பவங்கள் குறித்து 390 புகார்கள் கிடைத்ததாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கூறியது.

புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் கால அளவு மாறுபடலாம் என்றும், அதற்குப் பல மாத காலம் பிடிக்கலாம் என்றும் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

தனியார் வீடுகளைக் குறைந்த கால வாடகைக்கு விடுவது தொடர்பாகப் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள் குறித்த முதல் சுற்றுப் பேச்சு முடிந்திருப்பதாக அமைச்சர் கூறினார்.

தனியார் வீடமைப்புப் பேட்டைகள், குறைந்த கால வாடைகைக்கு வீடுகளை விடுவதற்கு 80 விழுக்காட்டு வீட்டு உரிமையாளர்களின் ஒப்புதலைப் பெற்றிருக்கவேண்டும் என்பது பரிந்துரைகளில் ஒன்று.

அதுகுறித்து மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டதாகத் திரு. வோங் தெரிவித்தார்.

ஆணையம் அவற்றை ஆய்வுசெய்த பிறகு, இறுதியான கட்டுப்பாட்டு அணுகுமுறையை முடிவுசெய்யும். சட்டரீதியான திருத்தங்கள் தேவையா என்பது குறித்தும் அதன்பிறகு முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

இடைப்பட்ட காலத்தில், தனியார் வீடுகளில் வாடகைதாரர்கள்,குறைந்தபட்சமாகத் தொடர்ந்து 3 மாதம் தங்கியிருக்கவேண்டும் என்ற வரம்பு நடப்பிலிருக்கும் என்று திரு. வோங் வலியுறுத்தினார்.  

உங்கள் கருத்து

Top