Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

HIV தகவல் கசிவுச் சம்பவம் - நடந்தது என்ன?

அமெரிக்கரான மிக்கி கே ஃபெரேரா புரோசெஸ் (Mikhy K Farrera-Brochez), நவம்பர் 2012இல், தனது HIV தொற்றுக் குறித்த தகவலை தனது காதலர் மற்றவர்களிடம் தெரிவித்ததாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

வாசிப்புநேரம் -
HIV தகவல் கசிவுச் சம்பவம் - நடந்தது என்ன?

(படம்: REUTERS/Athit Perawongmetha)


அமெரிக்கரான மிக்கி கே ஃபெரேரா புரோசெஸ் (Mikhy K Farrera-Brochez), நவம்பர் 2012இல், தனது HIV தொற்றுக் குறித்த தகவலை தனது காதலர் மற்றவர்களிடம் தெரிவித்ததாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அவரது காதலரின் பெயர் டாக்டர் லெர் டெக் சியாங் (Dr Ler Teck Siang).

தேசியப் பொதுச் சுகாதாரப் பிரிவின் தலைவராக அப்போது லெர்
பணியாற்றி வந்தார்.

விசாரணைக்கு புரோசெஸ் ஒத்துழைக்காததால் புலனாய்வில் போதிய முன்னேற்றம் காணமுடியவில்லை.

இருப்பினும், புதிய பொறுப்புக்கு லெர் மாற்றப்பட்டார்.

HIV பதிவேட்டை அணுகுவதற்கு அவருக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியும் நீக்கப்பட்டது.

விசாரணையின்போது, தனது வேலை அனுமதியைத் தக்கவைத்துக்கொள்ள, HIV இரத்த சோதனை முடிவு குறித்து புரோசெஸ் பொய்த் தகவல் அளித்ததை சுகாதார அமைச்சு கண்டுபிடித்தது.

மனிதவள அமைச்சிடமும் காவல்துறையிடமும் அதுபற்றிச் சுகாதார அமைச்சு புகார் செய்தது.

அப்போது, HIV கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட விவரங்கள் அவரிடம் இருந்தது குறித்துச் சந்தேகிக்க எந்த ஆதாரமும் இல்லை.

மே 2014இல், இரத்தப் பரிசோதனையில் பயன்படுத்தப்பட்டது தமது இரத்த மாதிரியே என்று காவல்துறை வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

அதை உறுதிப்படுத்த, அவரைப் புதிய சோதனைக்குச் செல்ல அமைச்சு உத்தரவிட்டது.

ஆனால், புரோசெஸ் அதற்கு இணங்கத் தவறியதால், ஏப்ரல் 2016இன் பிற்பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார்.

HIV கிருமித் தொற்றுள்ள 75 பேரின் விவரங்களை அதிகாரிகளிடம் புரோசெஸ் ஒப்படைத்தார்.

அவரிடம் அத்தகைய தகவல் இருப்பது சுகாதார அமைச்சுக்குத் தெரியவந்தது அதுவே முதன்முறை.

புரோசெஸ் மீது காவல்துறையிடம் இரண்டாவது புகார் செய்யப்பட்டது.

இருவருடைய வசிப்பிடத்திலும் நடத்திய சோதனையில், இரகசியத் தகவல்கள் அடங்கிய பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

புரோசெஸுக்கும் லெருக்கும் இடையிலான மின்னஞ்சல்கள், கணினிகள், மின்னியல் தகவல் சேகரிப்புக் கருவிகள் அவற்றில் அடங்குமெனத் திரு. கான் தெரிவித்தார்.

புரோசெஸ், லெர் இருவர் மீதும் ஜூன் 2016இல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

அதிகபட்சமாகச் சில வாரங்கள் மட்டுமே சிறைத் தண்டனை விதிக்க முடியும் என மதிப்பிடப்பட்டதால், அதிகாரத்துவ இரகசியச் சட்டத்தின் கீழ் புரோசெஸ் மீது குற்றஞ்சாட்டப்படவில்லை.

ஏற்கனவே அவர், கடுமையான தண்டனைக்கு ஆளாகக் கூடிய மோசடி, போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்கினார்.

ஓராண்டுக்குப் பின்னர் புரோசெஸ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 28 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் புரோசெஸின் தண்டனைக் காலம் முடிவுற்றதும் அவர் நாடுகடத்தப்பட்டார்.

நாடுகடத்தப்பட்ட ஒரு மாத காலத்தில், HIV கிருமித் தொற்றுள்ள 31 பேரின் தகவல்களை அரசாங்க அதிகாரிகளுக்கு புரோசெஸ் அனுப்பி வைத்தார்.

பாதிக்கப்பட்டோருக்கு அதுபற்றித் தகவலளிக்கப்பட்டது.

புரோசெஸ் மீது மேலும் ஒரு புகார் பதிவுசெய்யப்பட்டது.

இவ்வாண்டு ஜனவரியில் HIV கிருமித் தொற்றுள்ள 14,000க்கும் அதிகமானவர்களின் தனிப்பட்ட விவரங்களை புரோசெஸ் இணையத்தில் வெளியிட்டார்.

அதற்கான இணைப்பை அரசாங்கச் சார்பற்ற தரப்புக்கு அவர் அனுப்பி வைத்தார்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்