Images
  • ttsh kitchen

மருத்துவமனையின் சமையலறையில் என்ன நடக்கிறது?

சிங்கப்பூரின் டான் டோக் செங் மருத்துவமனையில் நாள்தோறும் கிட்டத்தட்ட 4,000 தட்டு உணவுகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு நோயாளியின் தேவைக்கேற்ப மருத்துவமனை எப்படி உணவு வகைகளைத் தயாரிக்கிறது?


1) உணவுப்பட்டியலைத் தயாரிக்க சுமார் 2 ஆண்டுகள் எடுக்கும்

14 நாள்களுக்கும் மூன்று வேளைகள் விதவிதமான உணவுகள் தயார் செய்யப்படுகின்றன, நீண்ட காலம் தங்கும் நோயாளிகளுக்கு உணவு சலிப்புத்தட்டாமல் இருக்க அவ்வாறு செய்கிறது மருத்துவமனை.

நோயாளிகளின் உணவுக் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப உணவுப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வகையில் உணவு தயாரிப்பது கடினம். அதனால் உணவு பட்டியல் விரிவாக இருப்பது அவசியம்.


2) மெல்லும் தன்மைக்கு ஏற்ப உணவுகள் பிரிக்கப்படுகின்றன

மருத்துவமனை உணவுகள் நான்கு வகைப்படும். சதாரண மெல்லும் தன்மை, எளிதாக மெல்லும் தன்மை, மெதுவான உணவு, அரைக்கப்பட்ட உணவு.

சில நோயாளிகளுக்கு உணவை மெல்ல சக்தி இருக்காது அவர்களுக்குப் பெரும்பாலான நோயாளிகள் உண்ணும் உணவு வகைகளை அளிக்க முடியாது. எளிதாக மெல்லக்கூடிய உணவுகள் 1.5 சதுர செண்டிமீட்டர் அளவு இருக்க வேண்டும். அரைக்கப்பட்ட உணவு, கட்டிகள் இல்லாமல் இருக்க வேண்டும்.


3) உணவு வகைகள் தினமும் சோதிக்கப்படுகின்றன

உணவு நோயாளிகளுக்கு உகந்ததாக மட்டுமில்லாமல் அவை சுவையிலும் தரமாக இருக்க வேண்டும். உணவின் உப்பு அளவு, அது தட்டில் பரிமாறப்பட்ட விதம் ஆகியவையும் சோதிக்கப்படுகிறன.


4) சமையல்காரர் தமது விருப்பதிற்கு ஏற்ப சமைக்க முடியாது

சில உணவுப் பொருட்களை உணவில் சேர்ப்பதற்கு முன் அவை நோயாளிகளுக்கு எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும் என்பதை அறிந்த பின்னர் அவற்றைச் சேர்க்க வேண்டும்.

சில சமயங்களில் மிளகு போன்ற தாளிப்புப் பொருள்கள் நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளுடன் சேர்ந்து சங்கடம் விளைவிக்கலாம்.


5) நோயாளிகளின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

உணவைப் பற்றி நோயாளிகளின் கருத்துகளைப் பெற்று வருகிறது மருத்துவமனை. இதன் மூலம் உணவு வகைகளை எவ்வாறு நோயாளிகளுக்காக மேம்படுத்துவது என்பதைக் கண்டறிய முடிகிறது.


6) இயந்திரங்களின் உதவி தேவை

மருத்துவமனையின் சமையலறையில் பெரும்பாலான ஊழியர்கள் முதியவர்கள், அதில் ஆக மூத்தவர் 75 வயது சமையல்காரர் ஒருவர். பெரிய அளவில் சமைப்பது அவர்களுக்குச் சிரமம். இதனால் இயந்திரங்களின் உதவி தேவைப்படுகிறது. காய்கறிகள், அரிசி போன்றவற்றைக் கழுவ இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் சமையல்காரர்களின் வேலைப்பளு குறைகிறது.


7) தானியக்க இயந்திரங்களும் விநியோகம் செய்கின்றன

சுமார் 15 தானியக்க இயந்திரங்கள் உணவுத் தட்டுகளை மருத்துவமனையின் சமையலறையிலிருந்து நோயாளிகள் தங்கியுள்ள அறைகளுக்குக் கொண்டு செல்கின்றன. ஒரு தானியக்க இயந்திரத்தால் 15 உணவுத் தட்டுகளை ஏந்திச் செல்ல முடியும். சாப்பிட்ட தட்டுகளை மீண்டும் சமையலறைக்கு எடுத்துச்செல்வதுடன் மற்ற வேலைகளைச் செய்யவும் அவை பயன்படுத்தப்படுகின்றன.


Top