Images
  • HSA
    படம்: HEALTH SCIENCES AUTHORITY

சட்டவிரோதமாக முகக்கவசங்களைத் தயாரித்த நிறுவனம்- 80,000 முகக்கவசங்கள் பறிமுதல்

உபி கிரசண்டில் (Ubi Crescent), சட்டவிரோத முகக்கவசங்களைத் தயாரித்து மறு-பொட்டலமிடும் இடம் ஒன்றை, சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) மே 31ஆம் தேதியன்று கண்டுபிடித்துள்ளது.

அங்கு 80,000க்கும் மேற்பட்ட முகக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Vision Empire International என்னும் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த உற்பத்தி நிலையத்தில், சுகாதார அறிவியல் ஆணையத்திடம் இருந்து முறையான உரிமம் பெறாமல், முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் ஒரு நிறுவனம், சட்டவிரோதமாக முகக்கவசம் உற்பத்தி செய்வதாகச் சந்தேகிக்கப்படுவது, இதுவே முதல்முறை.

முகக்கவசங்கள் சுகாதாரமற்ற, தற்காலிக வசதியில் தயாரிக்கப்பட்டு, திறந்த வெளியில் இருந்த அட்டைப்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன.

மொத்தம் 33 அட்டைப்பெட்டிகள், அந்த இடத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

அந்தப் பெட்டிகள் ஒவ்வொன்றிலும், சுமார் 2,500 முகக்கவசங்கள் இருந்தன.

மேலும் அந்த நிறுவனம், வெளிநாடுகளில் இருந்து முகக்கவசங்களை இறக்குமதி செய்து, தனது வணிகச் சின்னத்துடன் மறுமுறை-பொட்டலமிட்டு மறுவிற்பனை செய்ததாகவும் சந்தேகிக்கப்பட்டது.

அவ்வாறு செய்வதற்கு, அந்த நிறுவனம் உரிமம் பெறவில்லை.

‘Vision Empire Healthcare’ எனும் பெயரில் முகக்கவசங்கள் மறுவிற்பனை செய்யப்பட்டன.

உள்ளூர் இணைய வர்த்தகத் தளங்களில், 50 முகக்கவசங்களைக் கொண்ட ஒவ்வொரு பெட்டியும் 10 வெள்ளி முதல் 22 வெள்ளிவரை விலை-வைத்து விற்பனை செய்யப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்தது.

அவை இணைய வர்த்தகத் தளங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. விசாரணை தொடர்கிறது.

அந்த முகக்கவசங்களை வாங்கியோர்
உடனடியாக அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு, ஆணையம் ஆலோசனை கூறியது.

முகக்கவசங்களைச் சட்டவிரோதமாக உற்பத்தி செய்த அல்லது விநியோகித்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், 2 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது 50,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். 

Top