Images
  • hand cuffs

1200-க்கும் மேற்பட்ட பெட்டிகளில் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் - 4 பேர் கைது

சிங்கப்பூர் சுங்கத்துறை, 1200க்கும் மேற்பட்ட பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்துள்ளது.

அதன் தொடர்பில் சிங்கப்பூரர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 44 லிருந்து 56 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

Hendon Road, Netheravon Road வட்டாரங்களில் 20, 21 ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் அவர்கள் பிடிபட்டனர்.

அந்த வட்டாரத்தின் கார் நிறுத்துமிடத்தில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட 2 கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

அவற்றின் இருக்கைகளுக்கு அடியிலும், பொருள்கள் வைக்கும் இடத்திலும் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

அதன் தொடர்பில் ஓட்டுநர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் சகோதரர்கள். பின்னர் அதில் தொடர்புடைய மூன்றாம் நபரும் கைது செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், அவருடைய வீட்டில் 11 பொட்டலங்கள் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.

21 ஆம் தேதி மற்றொருவர் கைது செய்யப்பட்டார். அவர் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளை விநியோகம் செய்வதில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

கள்ள சிகரெட்டுகள் தொடர்பில் ஏய்க்கப்பட்ட பொருள் சேவை வரியின் மதிப்பு 160,000 வெள்ளிக்கும் அதிகம்.

இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நால்வர் மீதும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்களைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.  

Top