Images
  • CCK
    படம்: குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம்

சட்டவிரோதமாய்த் தங்கியிருந்த சந்தேகம் - 6 பேர் கைது

சுவா சூ காங் வட்டாரத்தில், குடிநுழைவு தொடர்பான குற்றம் புரிந்த சந்தேகத்தின்பேரில் ஆறு மியன்மார் குடிமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இடுகாட்டில் சட்டவிரோதமாய்த் தங்கியிருந்ததாகச் சந்தேகிக்கப்படுவதாய்க் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் கூறியது.

அவர்கள் 22 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.

அதிகாரிகளைக் கண்டதும், தப்பி ஓட முயன்ற ஒருவர் முதலில் பிடிபட்டார். பின்னர் அந்த நபர், இடுகாட்டில் தற்காலிகத் தங்குமிடம் அமைத்து அவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு அதிகாரிகளை அழைத்துச் சென்றார்.

அங்கே, எஞ்சிய ஐவரும் பிடிபட்டனர்.

தாங்கள் இடுகாட்டில் புதைகுழி தோண்டும் வேலையில் ஈடுபட்டு வருவதாக அந்த ஆடவர்கள் கூறியதாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணை தொடர்கிறது.

சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்ட காலத்திற்குக் கூடுதலாகத் தங்குவோருக்கும், சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைவோருக்கும், ஆறு மாதம் வரை சிறைத்தண்டனையும், 3 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

சட்டவிரோதமாக சிங்கப்பூரை விட்டுச் செல்பவர்களுக்கு, 2,000 வெள்ளி வரை அபராதம் அல்லது 6 மாதம் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று ஆணையம் தெரிவித்தது.
 

Top