Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

டிரம்ப்-கிம் சந்திப்பு: அனைத்துலக ஊடக நிலையம் ஒரு பார்வை! (காணொளி)

அமெரிக்க, வட கொரியத் தலைவர்களுக்கு இடையிலான உச்சநிலைச் சந்திப்பை எவ்விதத் தடையுமின்றி, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளோடு வழிநடத்துவது முக்கியம் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். 

வாசிப்புநேரம் -

அமெரிக்க, வட கொரியத் தலைவர்களுக்கு இடையிலான உச்சநிலைச் சந்திப்பை எவ்விதத் தடையுமின்றி, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளோடு வழிநடத்துவது முக்கியம் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தரும் அனைத்துலக ஊடக நிலையத்தில் நடைபெற்றுவரும் ஏற்பாடுகளைப் பார்வையிடச் சென்றபோது அவர் அதனைத் தெரிவித்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சந்திப்பைச் சிங்கப்பூர் ஏற்று நடத்துவது சிங்கப்பூரர்களுக்குப் பெருமிதம் தரும் ஒன்று என்றார் திரு. ஈஸ்வரன்.

உச்சநிலை மாநாட்டுச் செய்திகளைத் தொகுத்து வழங்க, அனைத்துலக ஊடகங்களைச் சேர்ந்த 2,500க்கும் அதிகமான செய்தியாளர்கள் சிங்கப்பூரில் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் வரலாற்றில் ஆக அதிகமான செய்தியாளர்கள் இங்கு வருவது இதுவே முதல்முறை என்று திரு. ஈஸ்வரன் கூறினார்.

குறுகிய காலகட்டத்தில் சிங்கப்பூர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு வாரங்களாக நேரம் காலம் பார்க்காமல் உழைத்த அரசாங்க அமைப்புகளையும் தனியார் நிறுவனங்களையும் திரு. ஈஸ்வரன் பாராட்டினார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 10) இரவு 10 மணியிலிருந்து வரும் புதன்கிழமை (ஜுன் 13) காலை 10 மணி வரை இந்த நிலையம் செயல்படும்.

செய்தியாளர்கள் தங்களது வேலையைச் சிரமமின்றிச் செய்வதற்காக 2,000 பேருக்கு இடமளிக்கும் 3 ஊடக அரங்குகள் (media room) அமைக்கப்பட்டுள்ளன.

கணினிகள், உச்சநிலைச் சந்திப்பை நேரடியாக ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள் ஆகிய வசதிகள் உள்ள 50 அறைகள், செய்தியாளர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்டுள்ளன.

செய்தியாளர் கூட்டங்களை நடத்தத் தேவையான கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

செய்தியாளர்கள் உணவு உண்பதற்கான அறையும் (dining room) நிலையத்தில் உண்டு.

The Common Good Company எனும் சிங்கப்பூர் உணவு நிறுவனம் செய்தியாளர்களுக்கு, இலவசமாக உணவு வழங்க முன் வந்துள்ளது.

23க்கும் மேலான உணவு வகைகளை அந்நிறுவனம் வழங்கவுள்ளது.

சிங்கப்பூர், கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் உணவு வகைகளை வழங்குவதாக அது குறிப்பிட்டது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்