Images
  • plane (1)
    படம்: Pixabay 

பயணக் காப்புறுதி - அவசியமா? இல்லையா?

ஆண்டிறுதி வந்துவிட்டது. பலரும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வர். ஆனால் அவர்களில் எத்தனை பேர் பயணக் காப்புறுதி எடுக்கிறார்கள்?


செய்தி நடத்திய ஆய்வின்படி, பயணம் மேற்கொள்ளும் பெரும்பாலோருக்குப் பயணக் காப்புறுதி பெறும் எண்ணம் இல்லை.

நான் பெரும்பாலும் பயணக் காப்புறுதி பெறுவதில்லை. அது அதிக வேலை. அதுவும் வெவ்வேறு பயணக் காப்புறுதிகள் இருக்கின்றன. குறைவான கட்டணம் கொண்ட காப்புறுதியால் பயன் அதிகம் இல்லை. ஆனால் அதிக நன்மைகள் கொண்ட காப்புறுதிகளின் கட்டணம் மிகவும் அதிகமாகவுள்ளது. 

என்றார் 24 வயது ஜனனி கிருஷ்ணன்.

அவரைப் போன்று பயணக் காப்புறுதியை வீண் செலவாகக் கருதுகிறார் செபாஸ்டியன்.

நான் பெரும்பாலும் விலையுயர்ந்த பொருள்களை பயணம் செய்யும்போது கொண்டுசெல்வதில்லை. அதனால் அவற்றுக்குப் பயணக் காப்புறுதி பெறும் அவசியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

என்றார் அவர்.

ஆனால் பயணம் செய்யும்போது எதிர்பாராத பல சம்பவங்கள் ஏற்படலாம் என்று எச்சரிக்கை செய்கிறார் பயணக் காப்புறுதி முகவர் ஸேன் சுவா.

மருத்துவ வசதிகள் அதிகம் இல்லாத கிராமப் பகுதிகளுக்குச் செல்லும்போது விபத்துகள் ஏற்பட்டால் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படும் சாத்தியம் உண்டு. இத்தகைய தருணங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால் பயணக் காப்புறுதியை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

என்று அவர் வலியுறுத்துகிறார்.

அதுவும் பயணக் காப்புறுதி விபத்துகளில் மட்டும் உதவுவதல்ல.

விமானங்கள் தாமதமடைவதால் ஏற்படும் சிரமங்களுக்கும் அவை உதவுகின்றன.

இதனால் தாம் பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் பயணக் காப்புறுதியை மறக்காமல் எடுப்பதாகக் கூறுகிறார் 26 வயது ரிஷிகுமார்.

பயணக் காப்புறுதிகளில் வெவ்வேறு வகை உள்ளன. நெருக்கடி நிலைகளில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அவற்றைச் சமாளிக்க பயணக் காப்புறுதி உதவும்.

என்றார் அவர்.

பயணம் செய்யும் பெரும்பாலான இளையர்கள் பயணக் காப்புறுதி பெறுவதாகக் கூறுகிறார் சுவா.

ஆனால் சிலர் எந்தப் பயணக் காப்புறுதியைப் பெறுவது என்று குழம்புவதாக அவர் கூறினார்.

எந்தக் காப்புறுதி பொருத்தமாக இருக்கும் என்று அறிந்து சரியான ஒன்றைத் தெரிவு செய்வது அவசியம் என்றார் அவர்.

Top