சுகாதார, கல்விக் கொள்கைகள் தொடர்ந்து மேம்பட வேண்டும்: பிரதமர் லீ
சிங்கப்பூர் அதன் சுகாதார, கல்விக் கொள்கைகளைத் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என இன்று (அக்டோபர் 11) மனிதவளத் திறன் மாநாட்டில் பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.
உலக வங்கிக் குழுமத்தின் மனிதவளத் திறன் குறியீட்டில் அந்த அம்சங்களில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பெற்றது குறித்து அவர் கருத்துரைத்தார்.
புதுப்புது எதிர்பார்ப்புகளும் சவால்களும் தொடர்ந்து வருவதால் சுகாதார, கல்விக் கொள்கைகளை மேலும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
சிங்கப்பூரில் தரம் வாய்ந்த கல்வி அமைப்பு இருந்தாலும் பாலர் பள்ளி நிலையில் மேலும் முன்னேற்றம் காண வேண்டும் எனப் பிரதமர் குறிப்பிட்டார்.
6 வயதில் பள்ளிக்கு மாணவர்கள் வேறுபட்ட திறன்களுடன் வருவதால், அவர்களின் திறனைப் புரிந்துகொள்ளும் கல்வி அமைப்பு அவசியமாகிறது என திரு. லீ சுட்டிக்காட்டினார்.
சிறுவர்கள் எந்தவிதக் குடும்பச் சூழலிலிருந்து வந்தாலும் அவர்களுக்கு நல்ல தொடக்கத்தை வழங்குவது முக்கியம் என்றார் அவர்.
மேலும், மூப்படைந்து வரும் சிங்கப்பூர்ச் சமூகத்தைக் கருத்தில் கொண்டு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் திரு. லீ கூறினார்.

