Images
  • fish port market
    (படம்: Google Street View)

'விழிப்புநிலை உயர்த்தப்பட்ட 2ஆம் கட்டத்துக்குத் திரும்பியதற்கு KTV குழுமம் காரணமல்ல'

சிங்கப்பூர், விழிப்புநிலை உயர்த்தப்பட்ட இரண்டாம் கட்டத்துக்குத் திரும்பியதற்கு, KTV சம்பந்தப்பட்ட கிருமித்தொற்றுக் குழுமம் காரணமல்ல எனச் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறியிருக்கிறார்.

அதற்கு ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகத்தில் ஏற்பட்ட கிருமித்தொற்றுக் குழுமமே காரணம் என்றார் அவர்.

அந்தக் குழுமத்தில் மேலும் அதிகமானோருக்குக் கிருமி பரவி வருகிறது.

நோய்த்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அமைச்சர் ஓங் சொன்னார்.

கிருமிப்பரவல் சூழலில் வாழத் தயாராகிவரும் நிலையில், ஏன் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க வேண்டும் எனச் சிலர் கேட்பதை அவர் சுட்டினார்.

KTV கிருமித்தொற்றுக் குழுமம் உருவாகக் காரணமாக இருந்த சிலரின் பொறுப்பற்ற நடத்தை குறித்து தமக்கும் வருத்தம் இருப்பதாக அவர் சொன்னார்.

ஆனால், வேலை காரணமாக, ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகத்துக்குச் சென்ற மீன் விற்பனையாளர்கள், கடை ஊழியர்கள் பலர், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அவர்கள் சிங்கப்பூர் முழுவதும் உள்ள பல்வேறு சந்தைகளுக்கு வேலைக்குச் சென்றனர்.

அதனால், சமூக அளவில் கிருமி வேகமாகப் பரவிவிட்டது.

நேற்றைய நிலவரப்படி, அந்தக் கிருமித்தொற்றுக் குழுமத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 454-ஆக உள்ளது.

அதுவே சிங்கப்பூரில் தற்போதுள்ள ஆகப் பெரிய கிருமித்தொற்றுக் குழுமம்.

Top