Images
  • jurong island highway acc (1)
    (படம்: Video Screengrab)

ஜூரோங் ஐலண்ட் நெடுஞ்சாலை விபத்து- 23 பேர் மருத்துவமனையில்

ஜூரோங் ஐலண்ட் நெடுஞ்சாலையில் இன்று ஏற்பட்ட விபத்தில் 23 பேர் காயமுற்று மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதைத் தொடர்ந்து 67 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு பேருந்துகள், ஒரு லாரி ஆகியவை சம்பந்தப்பட்ட விபத்து குறித்து காவல்துறைக்குக் காலை 7.40 மணிக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

ஒரு பேருந்தில் பயணிகள் இருந்தனர். அது இடப்பக்கத் தடத்தில் லாரிக்கு முன்னால் சென்றுகொண்டிருந்தது.

மற்றொரு பேருந்தில் பயணிகள் இல்லை. அது நடுத் தடத்தில், லாரிக்கு வலப்பக்கம் சென்றுகொண்டிருந்தது.

முன்னால் சென்ற பேருந்து திடீரென்று நிறுத்தியதைத் தொடர்ந்து, வாகனங்களோடு மோதாமல் இருக்க லாரி ஓட்டுநர் தமது வண்டியை வலப் பக்கம் செலுத்தியதாகக் கூறினார்.

இருப்பினும், லாரி முன்னால் சென்ற பேருந்தின் வலது பின்புறத்திலும் மற்றொரு பேருந்தின் பக்கத்திலும் மோதியது.

பேருந்து ஓட்டுநர், பயணிகள் உட்பட 23 பேர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் இங் டெங் ஃபொங் பொது மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்பட்டனர்.

விபத்து ஏற்பட்ட பிறகு எடுக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைத் தளங்களில் வலம் வருகிறது. மிகவும் சேதமுற்ற நிலையில் இருந்த பேருந்தின் பின்புறத்தைக் காணொளியில் காண முடிந்தது.

விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.  

Top