Images
  • Jurong West Pistols
    (படம்: SPF)

ஜூரோங் வெஸ்ட் வீட்டில் துப்பாக்கி, தோட்டா கண்டுபிடிப்பு - இருவர் கைது


ஜூரோங் வெஸ்ட்டில் சட்டவிரோதமாகத் துப்பாக்கி வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிருவரும் போதைப் பொருள் குற்றவாளிகள் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவும், சிங்கப்பூர்க் காவல் படையும் வெளியிட்ட கூட்டறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

24 வயது சந்தேக நபரிடம் துப்பாக்கி இருப்பதாகச் சென்ற திங்கட்கிழமை காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

மறுநாள் ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 72க்கு அருகே உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்பின் கீழ்த் தளத்தில் நடந்த சோதனையில் அவர் பிடிபட்டார்.

அவரது வீட்டிலிருந்த துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது; ஆனால் அந்த வீட்டில் போதைப்பொருள் ஏதும் சிக்கவில்லை.

மேல் விசாரணையில் அந்த ஆடவருடன் தொடர்பில் இருந்த 25 வயது ஆடவர் பற்றித் தெரியவந்தது. ஆடவர் துப்பாக்கி வைத்திருந்தது தெரிந்தும் அவருடன் தொடர்பில் இருந்த இரண்டாவது ஆடவர் இன்று கைதுசெய்யப்பட்டார்.

இருவர் மீதும் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 முதல் 10ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும், குறைந்தது 6 பிரம்படியும் விதிக்கப்படலாம்.


Top