Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

காலாங்கில் புத்தம்புதிய தீயணைப்பு நிலையம்

சிங்கப்பூரின் புத்தம்புதிய காலாங் தீயணைப்பு நிலையம் இன்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
காலாங்கில் புத்தம்புதிய தீயணைப்பு நிலையம்

(படம்: Singapore Civil Defence Force)


சிங்கப்பூரின் புத்தம்புதிய காலாங் தீயணைப்பு நிலையம் இன்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.

காலாங்கில் உள்ள விளையாட்டு நடுவத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தீச்சம்பவம் ஏற்படும்போது அதிகாரிகள் சம்பவ இடத்தை விரைவாகச் சென்றடைய முடியும்.

நிலையத்தில் உள்துறை அமைச்சின் சீருடைக்குழுக் கட்டுப்பாட்டு நிலையமும் உள்ளது.

கூட்டு நடவடிக்கைகளின்போதும் பெரிய நிகழ்வுகளின்போதும் உள்துறை அமைச்சின் சீருடைக் குழுக்களை ஒருங்கிணைக்கும் இடமாக அது விளங்கும்.


காலாங்கிற்கு ஆண்டுக்குச் சுமார் 12 மில்லியன் பேர் வருகையளிக்கின்றனர்.

வட்டாரத்தில் நிறுவப்பட்டுவரும் விளையாட்டு, பொழுதுபோக்கு வசதிகளால் அந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கக்கூடும்.

தீயணைப்பு நிலையத்தை அமைக்கும் பணி 2013-ஆம் ஆண்டு தொடங்கியது.

சிங்கப்பூரின் 22-ஆவது தீயணைப்பு நிலையம் இது. பலதரப்பட்ட அவசரகாலச் சூழல்களைக் கையாளக்கூடிய வாகனங்களை நிலையம் கொண்டிருக்கும்.

இங்கிருக்கும் உள்துறை அமைச்சின் சீருடைக் குழுக் கட்டுப்பாட்டு நிலையம்
சீருடைப் பிரிவில் தொழில்நுட்பத் திறன் கொண்ட அதிகாரிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும்.

அவசரகாலத்தில் முன்வந்து உதவ உயிர்காப்பாளர்களை அதிகம் கொண்டிருக்க வேண்டும் என சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்தார்.

குடிமைத் தற்காப்புப் படையினர், மருத்துவர்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் உயிர்காக்க முன்வரவேண்டும். அதற்கான முயற்சிகளில் காலாங் தீயணைப்பு நிலையம் முக்கியப் பங்காற்றும் என்று அவர் கூறினார்.

தீயணைப்பு நிலையம் என்பதைத் தாண்டி தொண்டூழியர்களுக்கும் சமூக சேவையாளர்களுக்கும் பயிற்சியளித்து அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வகைசெய்யும் இடமாகவும் நிலையம் திகழவிருக்கிறது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்