Images
  • Koh Poh Khoon
    (படம்: CNA)

சிங்கப்பூரில் சம்பள உயர்வு, உற்பத்தித்திறன் வளர்ச்சியை விஞ்சியுள்ளது: அமைச்சர் கோ போ கூன்

சிங்கப்பூரில் அண்மை ஆண்டுகளில் சம்பள உயர்வு, உற்பத்தித்திறன் வளர்ச்சியை விஞ்சியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக, தொழில் துறைக்கான மூத்த துணையமைச்சர் கோ போ கூன் (Koh Poh Koon), நாடாளுமன்றத்தில் இன்று அதனைத் தெரிவித்தார்.

2011க்கும், 2017க்கும் இடைப்பட்ட காலத்தில், ஒட்டுமொத்த சிங்கப்பூர் ஊழியர்களின் சம்பளம் ஆண்டுக்கு-ஆண்டு அடிப்படையில், 1.9 விழுக்காடு உயர்ந்ததாக அவர் கூறினார்.

ஆனால் அதே காலகட்டத்துக்கான உற்பத்தித்திறன் வளர்ச்சி 1.1 விழுக்காடாக மட்டுமே பதிவானது.

வெவ்வேறு துறைகளின் நிலவரம் மாறுபட்டிருந்ததாகத் டாக்டர் கோ குறிப்பிட்டார்.

சில துறைகளில் சம்பள உயர்வுக்கான நெருக்குதல் அதிகரித்தாலும், உற்பத்தித்திறன் வளர்ச்சி நலிவடைந்தது. கட்டுமானம், போக்குவரவு போன்ற துறைகளை அவர் உதாரணமாகச் சுட்டினார்.

இருப்பினும், உற்பத்தி, மொத்த-விற்பனை, நிதி போன்ற துறைகளில் உற்பத்தி வளர்ச்சி வலுவாக இருந்ததாகவும் டாக்டர் கோ கூறினார்.

அரசாங்கம், அந்தந்தத் துறைக்கு ஏற்ற அணுகுமுறையைக் கையாண்டு உற்பத்தியை அதிகரிக்க இலக்குக் கொண்டிருக்கிறது. துறை உருமாற்ற வழிகாட்டித் திட்டங்கள் போன்றவை அதனைச் சாத்தியமாக்கும் என்று அவர் தெரிவித்தார்.  

Top