Images
  • ktph

200 நோயாளிகள் மார்பகப் புற்றுநோயால் கடுமையாய் பாதிக்கப்பட்டதாகத் தவறான தகவல் கொடுத்த 5 ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த KTPH மருத்துவமனை

கூ டெக் புவாட் (Khoo Teck Puat)மருத்துவமனை, தனது ஊழியர்களில் 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

அவர்களால், சுமார் 200 நோயாளிகள் மார்பகப் புற்றுநோயால் கடுமையாய் பாதிக்கப்பட்டதாக, தவறாக வகைப்படுத்தப்பட நேரிட்டது.

முறையான தரக் கட்டுப்பாடு இல்லாமற்போனதும் மனிதத் தவறும், தவறான பரிசோதனை முடிவுகளுக்குக் காரணமாய் அமைந்துவிட்டதாக மறுஆய்வுக் குழு தெரிவித்தது.

Khoo Teck Puat மருத்துவமனையில் சுமார் 8 ஆண்டுகளாக அந்தத் தவறு நேரிட்டது.

அதனால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் அதிமானோர், தேவையற்ற சிகிச்சைக்கு ஆளாகி இருக்கக்கூடும்.

ஆரோக்கியமான உயிரணுக்கள் எவ்வாறு வளர்ந்து, பிரிந்து, தன்னைத்தானே சரிசெய்து கொள்கின்றன என்பதைக் கட்டுப்படுத்தும் மரபணுக்கள், மார்பகப் புற்றுநோயாளிகளிடம் அதிக அளவில் காணப்படும்.

ஆனால், அது இல்லாத நோயாளிகளுக்கும் இருப்பதுபோன்ற தவறு நேர்ந்ததாகக் கூறப்பட்டது.

தேசியச் சுகாதாரக் குழுமத்தின் மறுஆய்வுக் குழு, சம்பவத்தின் தொடர்பில் சுயேச்சையான விசாரணையை நடத்தியது.

முறையான தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றாமற்போனதால், அந்தத் தவற்றை முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியாமற்போனது.

மருத்துவமனை நிர்வாகத்தையும் ஊழியர்களையும் உள்ளடக்கிய 5 பேர், தங்களது கடமையையும் பொறுப்பையும் ஒழுங்காக நிறைவேற்றவில்லை என்று அடையாளம் காணப்பட்டது.

வேலை நீக்கம், அபராதம், கடுமையான எச்சரிக்கை ஆகிய தண்டனைகள் அவர்களுக்கு விதிக்கப்பட்டதாகக் குழு கூறியது.

ஆலோசனை, மறு பயிற்சி, மறு கல்வி ஆகியவை வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நடந்த தவற்றுக்கு, மருத்துமனையின் மருத்துவ வாரியத் தலைவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

சம்பவத்தை மிகவும் தீவிரமான ஒன்றாய்க் கருதுவதாக கூறிய அவர், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும் என்றார்.

Top