Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஊழியர்களை லாரிக்கு பதிலாக பேருந்தில் ஏற்றிச்செல்வது எளிதானதல்ல: கட்டுமான நிறுவனங்கள்

ஊழியர்களை லாரிக்கு பதிலாக பேருந்தில் ஏற்றிச்செல்வது எளிதானதல்ல: கட்டுமான நிறுவனங்கள்

வாசிப்புநேரம் -

ஊழியர்களை லாரிக்கு பதிலாக, பேருந்துகளில் ஏற்றிச்செல்வது எளிதானதல்ல என்று கட்டுமான நிறுவனங்கள் சில,
‘செய்தி’யிடம் தெரிவித்துள்ளன.

சிங்கப்பூரில் அண்மையில் சாலை விபத்துகளில் ஊழியர்கள் சிலர் காயமடைந்ததை அடுத்து, அவர்களை லாரியில் ஏற்றிச்செல்லும் போக்கு குறித்துக் கேள்விகள் எழுந்துள்ளன.

கட்டுமான நிறுவனங்கள் ஏன் லாரியைப் பயன்படுத்துகின்றன?

லாரியைப் பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த இயலும். ஊழியர்களை ஏற்றிச்செல்வது மட்டுமல்லாமல், பொருள்களை ஏற்றிச் செல்லவும் முடியும். கட்டுமானத் தளங்களிலிருந்து சில கழிவுகளையும் அப்புறப்படுத்தமுடியும. மாற்றுப் போக்குவரத்து முறைகளில் அது சாத்தியமாகாது. 

- திரு. மலைக்கொழுந்து (Straits Teamwork)

பெரும்பாலும், லாரிகளில் பொருள்களுடன் ஊழியர்களையும் தாங்கள் ஏற்றிச்செல்வதில்லை என்றும் நிறுவனங்கள் தெரிவித்தன.

நாங்கள் காலையிலும் மாலையிலும், ஊழியர்களை விடுதிகளிலிருந்தும், வேலையிடத்திலிருந்தும் அழைத்துச் செல்வதற்கு லாரியைப் பயன்படுத்துவோம். பொருள்கள் தனியாக ஏற்றிச் செல்லப்படும். சில முறை மட்டும்தான், ஊழியர்களுடன் சிறிய அளவிலான பொருள்களை ஏற்றிச் செல்வோம்.

-திரு. கலையரசன் (Perfect Technologies)

பேருந்துக்கோ, வேனுக்கோ மாறுவதில் என்ன சிரமம்?

பேருந்துக்கோ, வேனுக்கோ மாறுவது, சிறிய நிறுவனங்களுக்குக் கட்டுப்படியாகாது என்று கட்டுமான நிறுவனங்கள் தெரிவித்தன.

ஒரு வேலையிடத்தில் 100 ஊழியர்கள் வேலை செய்தால், அதற்குப் பேருந்தை ஏற்பாடு செய்யலாம். இருப்பினும், நாங்கள் பல்வேறு கட்டுமானத் திட்டங்களில் ஈடுபடுகிறோம். ஒவ்வொரு இடத்திற்கும், அதிகபட்சமாக 10 ஊழியர்களைத் தான் அனுப்புகிறோம். அதற்கு ஒரு பேருந்தை ஏற்பாடு செய்வது சிரமம்.

-திரு. மணி மலைச்சாமி (MMM Contract Services)

பேருந்துகளைப் பயன்படுத்தினாலும், ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்கு அப்பால், அதற்கு வேறு எந்தப் பயனும் இருக்காது என்றும் கூறப்பட்டது.

அத்துடன் பேருந்தைப் பயன்படுத்தும் போது செலவுகள் கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

பேருந்தை வாங்குவதற்குத் தனி முதலீடு தேவை. பேருந்தைப் பயன்படுத்தினால் பேருந்தை நிறுத்துவதற்கான (parking) செலவுகளும் உண்டு. பேருந்து ஓட்டுநர்களுக்கு அதிகச் சம்பளம் வழங்கவேண்டும். அரசாங்கம் அதற்கான மானியங்களை அளிக்க முன்வந்தால், சற்றுப் பரிசீலனை செய்யலாம்.

-திரு. சக்தி ராமு (SM Iron Works)

மாற்று வழிகளைப் பயன்படுத்துவது சிரமம் என்றால், லாரிகளில் பாதுகாப்பை மேம்படுத்த என்ன செய்யலாம்?

ஊழியர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு ஓட்டுநர்கள் முக்கியப் பங்கை ஆற்றுகின்றனர் எனக் கட்டுமான நிறுவனங்கள் குறிப்பிட்டன.

ஓட்டுநர்கள் 3,4 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைப் பெற்றிருக்கின்றனர். வாகனம் ஓட்டும் போது அவர்கள் கைத்தொலைபேசியைப் பயன்படுத்தாமல் இருப்பதையும் உறுதிசெய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், ஓட்டுநர்களுக்குப் பிற்பகல் நேரத்தில் தகுந்த ஓய்வு வழங்கப்படுவதையும் அவர்கள் உடலுழைப்பு தேவைப்படும் பணிகளில் ஈடுபடாமல் இருப்பதையும் முதலாளிகள் உறுதிசெய்ய வேண்டும்.

நான் லாரியில் கண்காணிப்புக் கருவி ஒன்றை நிறுவியுள்ளேன். அதன் மூலம் ஓட்டுநர் செல்லும் வேகத்தையும், அவர்கள் Brake எனும் வேகக் கட்டுப்பாட்டு விசையை அழுத்தும் தருணங்களையும் கண்காணிக்கமுடியும்.

என்று திரு. மணி மலைச்சாமி சொன்னார்.

லாரியில் பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்துவது.

லாரிகளில் இருக்கை வார் பொருத்தப்படுவதைப் பெரும்பாலான நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. இருப்பினும் வார்களில் பலவகை உள்ளன. லாரியில் வார்களைப் பொருத்துவது குறித்து அதிகாரபூர்வ வழிகாட்டிகள் வெளியிடப்படுவது சிறந்தது என்றும் அதற்கான தரநிலைகளை அமைப்பதன் மூலம் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யமுடியும் என்றும் Daalini Engineering நிறுவனத்தின் திரு. துளசி நாயுடு சொன்னார்.

தற்போதைய சூழலில், ஊழியர்களுக்கென்றே தனிப் பொதுப் போக்குவரத்துப் பேருந்துச் சேவையை ஏற்பாடு செய்தால், ஆபத்துகளைக் குறைக்கலாம் என்றும் கூறப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்