Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"இதோ வருகிறேன்!"... மலேசியாவில் உள்ள அன்புக்குரியவர்களைக் காண ஆவலுடன் காத்திருக்கும் சிங்கப்பூரில் வசிக்கும் மலேசியர்கள்!

மலேசியா-சிங்கப்பூர் இடையே VTL எனும் சிறப்புப் பயண ஏற்பாடு இம்மாதம் 29ஆம் தேதி தொடங்கவிருக்கிறது!

வாசிப்புநேரம் -

மலேசியா-சிங்கப்பூர் இடையே VTL எனும் சிறப்புப் பயண ஏற்பாடு இம்மாதம் 29ஆம் தேதி தொடங்கவிருக்கிறது!

அதற்கேற்ப சிங்கப்பூர்-மலேசியா இடையிலான சாலைவழிப் பயணங்களும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்புப் பயண ஏற்பாடு தொடங்கும் முதல் வாரத்தில் மட்டும் ஏறக்குறைய 1,440 பேர் ஜொகூர்-சிங்கப்பூர் இடையே பயணம் செய்வர் என எதிர்பார்க்கப்படுவதாக ஜொகூர் மாநில அரசாங்கம் கூறியுள்ளது.

அத்தகைய ஏற்பாடு தொடங்கவிருப்பது மலேசியர்களுக்கு, குறிப்பாக, ஜொகூரில் வசிக்கும் பலருக்கு சொல்லிலடங்கா ஆனந்தமளித்துள்ளது.

எல்லைகள் மூடப்பட்டதால் தங்களது குடும்பத்தாரைப் பிரிந்து ஏக்கத்தில் வாடிக் கொண்டிருக்கும் எத்தனையோ பேருக்கு ஏற்பாடு பெரும் ஆறுதலைத் தந்துள்ளது.

திரு.ஹபிப் முகமது, 55

அடுத்தாண்டு மே மாதம் தமது மகளுக்குத் திருமணம் நடத்தக் காத்திருக்கும் ஜொகூர், தம்போயைச் (Tampoi) சேர்ந்த திரு.ஹபிப் முகமது, எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டிருந்தால் என்ன செய்வது எனக் கலங்கிக் கொண்டிருந்த நிலையில் இருந்தார்.

“கடந்த 21 ஆண்டுகளாக சிங்கப்பூரில் மார்சிலிங் (Marsiling) எனுமிடத்திலுள்ள உணவகத்தில் சமையல் வல்லுநராகப் பணி புரிந்து வருகிறேன்.

நோய்ப்பரவலுக்கு முன், தினந்தோறும் வேலை முடிந்து ஜோகூரின் தம்போயிலுள்ள (Tampoi) என் வீட்டிற்குத் திரும்பி விடுவேன்.

ஆனால் நோய்ப்பரவலால் எல்லைகள் மூடப்பட்ட பின்னர் வேறு வழியில்லாமல் சிங்கப்பூரிலேயே தங்கி விட்டேன்.

மகளுக்குத் திருமணம் வைத்துள்ளேன், வீடு திரும்பி செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன.

மீண்டும் மலேசியாவுக்குச் செல்லலாம் என்ற செய்தி ஆறுதலைத் தந்துள்ளது

என்கிறார் திரு.ஹபிப்.

திரு.விக்ரம் விஜயசூரியா, 39

2009ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரிலுள்ள பிரபல தங்கும் விடுதியொன்றில் பணிபுரிந்து வருகின்றேன். முன்பு ஒவ்வொரு வாரமும் என் குடும்பத்தைக் காண மலாக்காவின் அலோர் காஜா (Alor Gajah) வந்து விடுவேன்.

ஆனால் எல்லைகள் மூடப்பட்ட பின்னர் அவ்வாறு அடிக்கடி குடும்பத்தைக் காண வர முடியவில்லை.

கடந்த மாதம் குடும்பத்தைக் காண, PCA பயணத் திட்டத்தின் வாயிலாக மலாக்கா வந்தேன். வரும் 26ஆம் தேதி நான் மீண்டும் சிங்கப்பூர் திரும்பியாக வேண்டும்.

இதன் பிறகு என் மனைவி-பிள்ளைகளைப் பார்க்க, அடிக்கடி மலாக்கா வர முடியும் என்பது மிகப் பெரிய ஆறுதல்.

என மகிழ்ச்சி பொங்கக் கூறினார் திரு.விக்ரம்.

திரு.கணேசன் சுப்ரமணியம், 32

சிங்கப்பூரில் நான் பணிபுரியும் தங்கும் விடுதியில் தற்போது ஆள் பற்றாக்குறை நிலவுவதால் எனக்கு ஜனவரியில் தான் விடுமுறை கிடைக்கும்.

அப்போது இந்த VTL சிறப்பு தரை வழி பயணத் திட்டத்தின் வாயிலாக எனது சொந்த ஊரான மலாக்கா திரும்பத் திட்டமிட்டுள்ளேன்.

ஈராண்டுகளுக்கும் மேலாகி விட்டது என் குடும்பத்தாரைப் பார்த்து. எனது 72 வயது தந்தை, அண்ணன், அக்காள், அவர்களது பிள்ளைகள், என் நண்பர்கள் அனைவரையும் பார்க்க மனம் ஏங்கித் தவிக்கிறது.

இந்த ஈராண்டுகளில் தூரத்தில் இருக்கும் என் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள என்னால் முடியவில்லை. இடம்பெறும் பலவற்றைத் தூரத்திலிருந்து தெரிந்துகொண்டு கவலை மட்டுமே பட முடிந்த எனக்கு, சிறப்புப் பயண ஏற்பாடு புது நம்பிக்கையைத் தந்துள்ளது.

என்றார் திரு.கணேசன்.

இப்படி எத்தனையோ பேர் பிரியமானவர்களை விட்டுப் பிரிந்து அவர்களை நேரில் சென்று காண முடியாமல் ஏக்கத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது ஏக்கத்துக்கு இந்தத் தரைவழிப் பயணத் திட்டம் நிச்சயம் அருமருந்தாக அமையும் என்பது திண்ணம்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்