Images
  • man fined
    படம்: TODAY/Nuria Ling

இணையத்தில் சட்டவிரோதமாக மின்-சிகரெட்டுகளை விற்ற ஆடவருக்கு $99,000 அபராதம்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

இணையத்தில் சட்ட விரோதமாக மின்-சிகரெட்டுகளை விற்பனை செய்த சிங்கப்பூர் ஆடவருக்குச் சுகாதார அறிவியல் ஆணையம் 99,000 வெள்ளி அபராதம் விதித்துள்ளது.

35 வயது சோங் வெய்ஷெங்(Chong Weisheng), சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதை ஆணையம் அதன் இணையக் கண்காணிப்பு மற்றும் விசாரணைமூலம் கண்டுபிடித்தது.

அதைத் தொடர்ந்து ஆணையத்தின் அதிகாரிகள் 2015ஆம் ஆண்டு மார்ச்சில் சோங்கின் வீட்டைச் சோதனையிட்டனர்.

வெளிநாட்டு விநியோகிப்பாளர்களிடமிருந்து அவர் தடைசெய்யப்பட்ட பொருள்களை வாங்கி 'huntersbrew-dot-net' எனும் மின்-வர்த்தகத் தளத்தில் விற்றது விசாரணையில் தெரியவந்தது.

ஆணையத்தின் சோதனை நடவடிக்கை குறித்துத் தெரிந்துகொண்ட சோங், தனது சட்டவிரோத நடவடிக்கைகளை மறைக்க முயன்றார்.

இணையத் தளப் பெயரை இருமுறை மாற்றினார். மூன்றாவது இணையத் தளத்தைப் பயன்படுத்த மறைச்சொல் தேவைப்பட்டது.

கணினிச் சேவை என்ற போர்வையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருள்களை விற்பனை செய்தார்.

இருப்பினும், ஆணையத்தின் தீவிர முயற்சியால் அவரது இணைய விற்பனை முடக்கப்பட்டது.

மின்-சிகரெட்டுகளுக்குச் சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புகையிலைச் சட்டத்தின் கீழ், மின்-சிகரெட்டுகளின் விற்பனை, இறக்குமதி, விநியோகம் ஆகியவை குற்றமாகக் கருதப்படும் என்பதை ஆணையம் நினைவுபடுத்தியது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதல்முறைத் தவறு செய்தோருக்கு, 10,000 வெள்ளி வரையிலான அபராதமோ, 6 மாதச் சிறைத்தண்டனையோ, இரண்டுமோ விதிக்கப்படலாம்.

அடுத்தடுத்த முறைகளுக்கு, 20,000 வெள்ளி வரையிலான அபராதமோ, ஓராண்டுச் சிறைத்தண்டனையோ, இரண்டுமோ விதிக்கப்படலாம்.


Top