Images

வருகைப் பதிவுமுறை கட்டாயம் - 'பாதுகாப்புக்கே முன்னுரிமை' என்கின்றனர் வாடிக்கையாளர்கள், கடைக்காரர்கள்

(நிருபர்: சுகந்தி பெரியசாமி)

அனைத்து ஈரச் சந்தைகளிலும் உணவங்காடி நிலையங்களிலும் வருகைப் பதிவுமுறை கட்டாயமாக்கப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

அந்த இடங்களுக்குச் செல்வோர், TraceTogether செயலி அல்லது கருவியைப் பயன்படுத்தி தங்கள் வருகையைப் பதிவு செய்ய வேண்டும்.

ஈரச்சந்தைகளில் TraceTogether SafeEntry பதிவுமுறையை நடைமுறைப்படுத்துவதன் மூலம், மக்களின் அச்சத்தை விலக்கமுடியும் என்று கூறினார்கள், வாடிக்கையாளர்கள் சிலர்.


முன்பு, வீட்டிற்கு அருகில் உள்ள ஈரச்சந்தையில் பலரும் TraceTogether பயன்படுத்தியதில்லை. அங்கு வயதானவர்களும் கூடுவதுண்டு. கடைகளில் கூட்டமும் ஏற்படுவதுண்டு. இனி, அனைவரும் பாதுகாப்பாக உணரமுடியும் என்று எண்ணுகிறேன். 

என்று ஆர்த்தி சொன்னார்.

வருகைப் பதிவுமுறை, நோயால் பாதிக்கட்டவர்களுடன் தொடர்பில் வந்தவர்களை எளிதில் கண்டறிய உதவும் என்று சிலர் தெரிவித்தனர்.


நான் முன்பு Westgate கடைத்தொகுதிக்கு சென்றிருந்தேன். அப்போது, 2 வாரங்களுக்கு உடல்நலத்தைக் கண்காணிக்கும்படி, அரசாங்கத்திடமிருந்து குறுந்தகவல் கிடைத்தது. அது SafeEntry போன்ற தொழில்நுட்பங்களால் மட்டுமே சாத்தியம்,

என்று திரு. வைத்தியநாதன் கூறினார்.

அந்தப் பதிவுமுறை, வாடிக்கையாளர்களின் அச்சத்தை விலக்க உதவினாலும், அவர்கள், கடைகளில் உள்ள நீண்ட வரிசைககளைக் கண்டு அஞ்சலாம் என்று உணவுக்கடைக்காரர்கள் சிலர் குறிப்பிட்டனர்.

அது வியாபாரத்தைப் பாதிக்கும் என்றும் கவலை தெரிவித்தனர்.

கிருமித்தொற்றுச் சூழலில், கட்டுப்பாடுகளால் வியாபாரம் குறைந்திருந்தாலும், அதைப் புரிந்துகொள்ளமுடிவதாகத் தேக்கா சந்தை நட்பார்ந்த சங்கத்தின் துணைத் தலைவரான திரு. முகமது முஸ்தபா சொன்னார்.


பொதுமக்கள், கடைக்காரர்கள் ஆகியோரின் பாதுகாப்பு தான் முக்கியம். அதைக் கருத்தில்கொண்டு, அனைவரும் கவனமாகச் செயல்படவேண்டும்.

என்று அவர் கூறினார்.

கட்டுப்பாடுகள் மாறிக்கொண்டே வருகின்றன... வர்த்தகத்திலும் நிலைத்தன்மை இல்லை..

இருப்பினும் பாதுகாப்புக்கே முன்னுரிமை என்கின்றனர், வாடிக்கையாளர்களும், கடைக்காரர்களும். 

Top