Images
  • sg india
    (படம்: MINDEF)

சிங்கப்பூரும் இந்தியாவும் வலுவான தற்காப்பு உறவை மறுவுறுதிப்படுத்தியுள்ளன

சிங்கப்பூரும் இந்தியாவும் நீண்டகாலமாக இருந்துவரும் வலுவான தற்காப்பு உறவை மறுவுறுதிப்படுத்தியுள்ளன.

நான்காவது இந்திய-சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர்கள் கலந்துரையாடலில் அது குறித்து அறிவிக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கு இடையிலான தற்காப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னும் இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பேச்சு நடத்தினர்.

சிங்கப்பூர், இந்தியா, தாய்லந்து ஆகிய நாடுகளுக்கு இடையே கூட்டுக் கடல்துறை பயிற்சி இனி ஆண்டுதோறும் நடத்தப்படவுள்ளது.

அந்தமான் கடற்பகுதியில் 5 நாள் கூட்டுக் கடல்துறை பயிற்சி செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது.

500க்கும் அதிகமானோர் பங்கேற்ற பயிற்சியில் ஐந்து கப்பல்களும் பயன்படுத்தப்பட்டன.

மூன்று நாடுகளுக்கு இடையே நடைபெறும் கூட்டுக் கடல்துறைப் பயிற்சி, கடல் வழிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, படையினரின் நம்பிக்கையை வளர்ப்பதாகத் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்தார்.

அந்தக் கடல் வழிகளைப் பயன்படுத்தும் உலக நாடுகளின் நம்பிக்கையை அது வலுப்படுத்துவதாகவும் அவர் சொன்னார்.

இன்று இரண்டு இணக்கக் குறிப்புகளும் கையெழுத்திடப்பட்டன.

அவற்றுள் ஒன்று, சிங்கப்பூரின் Spyder system ஆயுதத்தை இந்தியாவில் சோதிக்க உதவும்.

மற்றொன்று, இரு நாடுகளுக்கிடையே மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரண உதவி தொடர்பான ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவும்.

செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு போன்ற துறைகளில் இணைந்து செயல்படவும் அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
 

Top