Images
  • mas police report (1)
    (படம்: சேனல் நியூஸ்ஏஷியா)

தீய நோக்கமுடைய இணையக் கட்டுரை குறித்துக் காவல்துறையிடம் புகார் : சிங்கப்பூர் நாணய வாரியம்

1MDB நிதி மோசடி தொடர்பில் போலியான, தீய நோக்கமுடைய கருத்துகளைக் கொண்ட இணையக் கட்டுரையை States Times Review வெளியிட்டதாக, சிங்கப்பூர் நாணய வாரியம், காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.

States Times Review இணையப்பக்கத்தில் வெளியான கட்டுரையை எழுதியவர் மீது அவ்வாறு புகார் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

வாரியத்தின் நேர்மை குறித்து கேள்வி எழுப்புவது போன்ற போலியான, தீய நோக்கமுடைய கருத்துகள் கொண்ட கட்டுரை, இம்மாதம் ஐந்தாம் தேதி அந்த இணையப்பக்கத்தில் வெளியானதாக வாரியம் சொன்னது.

" லீ சியென் லூங் 1MDB விசாரணையின் முக்கிய இலக்கு"
(("Lee Hsien Loong becomes 1MDB’s key investigation target" )) எனும் தலைப்பில் அந்தக் கட்டுரை வெளியானது.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் நடவடிக்கையில் சிங்கப்பூர் வங்கிகள் கைகொடுப்பதற்குப் பதிலுதவியாக மலேசியா சிங்கப்பூருடன் சில நியாயமற்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருப்பதாக அது குறிப்பிட்டது.

அந்தக் கட்டுரை ஆதாரமற்றது என்றும் அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது என்றும் வாரியம் சொன்னது.

1MDB தொடர்புடைய பரிவர்த்தனைகளில் சிங்கப்பூரில் உள்ள வங்கியாளர்களுக்கும் வங்கிகளுக்கும் தொடர்பிருக்கும்பட்சத்தில் கடந்த ஈராண்டில் வாரியம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதனை அக்கட்டுரை புறக்கணித்திருப்பதாகக் கூறியது வாரியம்.

மலேசியாவில் தலைமைத்துவம் மாறிய பிறகு, 1MDB குறித்த விசாரணைகளை மீண்டும் தொடங்கும் கட்டாயத்துக்கு சிங்கப்பூர் தள்ளப்பட்டது என்று கட்டுரை பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக வாரியம் கூறியது.

1MDB குறித்த விசாரணைகள் முடிவுறவில்லை; புதிய ஆதாரம் கிடைத்தால் விசாரணையை மேற்கொள்ள வாரியம் தயக்கம் காட்டாது என்று கடந்த ஈராண்டாக நடந்த வருடாந்திர செய்தியாளர்க் கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டது.

வாரியம் அதன் கண்ணியத்தைக் கட்டிக்காப்பதற்கு ஆக அதிக முக்கியத்துவம் தருவதாகவும், பொய்யான குற்றச்சாட்டுகளைக் கடுமையாகக் கருதுவதாகவும் தெரிவித்தது. 

Top