Images
  • MAS
    (படம்: REUTERS/Edgar Su/File Photo)

சிங்கப்பூரின் 2019 வளர்ச்சி முன்னுரைப்பு 2.1 % ஆகக் குறைப்பு


சிங்கப்பூரின் இந்த ஆண்டு வளர்ச்சி முன்னுரைப்பை, பொருளியல் வல்லுநர்கள் மீண்டும் குறைத்துள்ளதாக, சிங்கப்பூர் நாணய வாரியம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் காலாண்டு வளர்ச்சி, கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளில் ஆகக் குறைவான விகிதத்தை எட்டியது அதற்கொரு காரணம்.

இந்த வருடத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.1 விழுக்காடாக இருக்கும் என்பது புதிய முன்னுரைப்பு. இதற்குமுன் அது, 2.5 விழுக்காடு என முன்னுரைக்கப்பட்டிருந்தது.

இந்த ஆண்டின் வளர்ச்சி, இரண்டிலிருந்து 2.4 விழுக்காட்டுக்குள் இடைப்பட்டிருக்குமென வாரியத்தின் ஆய்வு குறிப்பிட்டது. முன்னதாக, வர்த்தக, தொழில் அமைச்சு, மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு
ஒன்றரை முதல் இரண்டரை விழுக்காட்டுக்குள் இருக்கும் என மதிப்பிட்டிருந்தது.

உற்பத்தி, சில்லறை விற்பனை, நிதி-உள்ளிட்ட பெரும்பாலான துறைகளில் வளர்ச்சி குறைவாகவே இருக்குமெனப் பொருளியல் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். கட்டுமானத் துறை மட்டும் ஓரளவு மேம்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

உலக வர்த்தகத்தில் உருவாகிவரும் தன்னைப்பேணித்தனமே, வளர்ச்சியை பாதிக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்று எனப் பெரும்பாலோர் கருத்துக் கூறியுள்ளனர்.

சீனப் பொருளியலும் உலகப் பொருளியலும் மெதுவடைவது, வளர்ச்சி முன்னுரைப்பு குறைவதற்கான மற்ற சில முக்கியக் காரணங்கள்.

அதேவேளையில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பூசல் தணிந்தால், வளர்ச்சி வாய்ப்பு அதிகரிக்கும் என்பதை ஆய்வில் பங்கேற்றவர்களில் சுமார் 71 விழுக்காட்டினர் ஒப்புக்கொண்டனர்.


 

Top