Images
  • Masagos Hari raya
    (படம்: Berita)

நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள், அதிரடித் திட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம் : அமைச்சர் மசகோஸ்

நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள், அதிரடித் திட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம் என்று முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (Masagos Zulkifli) கூறியுள்ளார்.

கிருமிப்பரவல் மீண்டும் நேர்ந்துவிடாமல் தடுக்க அது உதவும் என்றார் அவர்.

CNA 938 வானொலிக்கு அளித்த நேர்காணலில், அவர் அதனைத் தெரிவித்தார்.

அதிரடித் திட்டம் நடப்பில் உள்ளதால், முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளன்று காலையில் பள்ளிவாசலுக்குச் சென்று சிறப்புத் தொழுகைகளில் கலந்துகொள்ள இயலாது.

ஆனால், பெருநாள்களுக்கு உரிய தக்பிர் தொழுகை அழைப்பு, சமூக ஊடகங்களிலும், Warna வானொலி நிலையம் வாயிலாகவும் ஒளிபரப்பப்படும்.

கிருமித்தொற்றால் மூத்தோர் எளிதில் பாதிப்படையக்கூடும்; எனவே அவர்களுக்காகப், பொறுப்புடன் செயல்படுவது அவசியம் என்பதை அமைச்சர் மசகோஸ் நினைவூட்டினார்.

இதற்கிடையில், கடந்த 3 மாதங்களில் பதிவான டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் 2 மடங்கு அதிகரித்திருப்பதையும் அவர் சுட்டினார்.

பொதுவாக மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அதனால், வீட்டிலிருந்து வேலை செய்யும் இந்தக் காலக்கட்டத்திலும், கொசுக்கள் பெருகிவிடாமல் பார்த்துக்கொள்ள மக்கள் இயன்றதைச் செய்யவேண்டும் என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் திரு. மசகோஸ் கேட்டுக்கொண்டார். 

Top