Images
  • merlion (1)

சிங்கத் தலை, மீன் உடல் : எங்கு பார்க்கலாம்?

சிங்கப்பூரின் வரலாற்றுக் கதைகளில் ஒன்று சாங் நீல உத்தமா எனும் மன்னரைப் பற்றியது.

அவர் இங்கு முதன்முதலில் சிங்கத்தைக் கண்டதால் 'சிங்கப்பூரா' என்று பெயர் சூட்டினார்.

இந்தக் கதையில் மட்டுமின்றி சிங்கம் சிங்கையின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கிறது.

1964இல் சிங்கப்பூரின் சின்னமாக உருவெடுத்தது மெர்லயன்.
சிங்கத் தலையும் மீன் உடலும் கொண்ட அந்தச் சின்னத்தை சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் வெளியிட்டது. சிலையின் மீன் பகுதி, சிங்கப்பூர் ஒரு காலத்தில் மீன்பிடிக் கிராமமாகத் திகழ்ந்ததைக் குறிக்கிறது.

அதனை உருவாக்கியவர் ஃபிரேஸர் பிரன்னர் (Fraser Brunner).

சிங்கப்பூரின் சின்னமாக விளங்கினாலும் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே அந்தச் சிலையைப் பார்க்கலாம்.

அவற்றுள் சில:

மெர்லயன் பூங்கா

ஃபுல்லர்ட்டன் ஹோட்டலுக்கு முன்னால் இருக்கும் மெர்லயன் சிலைகள் முன்பு சிங்கப்பூர் ஆற்றுக்கு முன்னால் இருந்தன.
1972ஆம் ஆண்டு முதல் மெர்லயன் சிலை திறக்கப்பட்டது.
8.6 மீட்டர் உயரம் கொண்ட மெர்லயன் சிலைக்குப் பின்னால் 2 மீட்டர் உயரம் கொண்ட குட்டி மெர்லயன் சிலையும் வடிவமைக்கப்பட்டது.


செந்தோசா

சிங்கப்பூரில் உள்ள ஆக உயரமான மெர்லயன் சிலை செந்தோசாவில் உள்ளது. அதன் உயரம் 37 மீட்டர்.
ஆஸ்திரேலியர் ஜேம்ஸ் மார்ட்டின் இதனை வடிவமைத்தார். 320 செதில்கள் கொண்ட மெர்லயன் சிலை எண்கோணமுடைய அடித்தளத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அதன் 4 பற்கள் சிங்கப்பூரின் 4 இனங்களைப் பிரதிநிதிக்கிறது.
மின்தூக்கிவழி சுற்றுப்பயணிகள் மெர்லயனின் வாய்ப்பகுதிக்கும் தலைப்பகுதிக்கும் செல்லலாம்.

பயணத் துறைக் கழகத் தலைமையகம் (Tourism Court)

1 ஆர்ச்சர்ட் ஸ்பிரிங் லேனில் அமைந்துள்ள பயணத்துறைக் கழகத்தின் தலைமையகத்தில் 3 மீட்டர் உயரம் கொண்ட மெர்லயன் சிலை உள்ளது. 1995ஆம் ஆண்டு அது கட்டப்பட்டது.
ஒரு வகையான பளிங்கு (Polymarble) கொண்டு அந்தச் சிலை உருவாக்கப்பட்டது.


அங் மோ கியோ

அங் மோ கியோ அவென்யூ 1இல் புளோக் 216க்கும் 220க்குமான கார் நிறுத்துமிடத்தின் முன்பகுதியில் இரண்டு மெர்லயன் சிலைகள் உள்ளன.
அங்குள்ள குடியிருப்பாளர்களின் சொந்த முயற்சியால் அந்தச் சிலைகள் அங்கு வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

Top