Images
  • Shanmugam new law

States Times Review இணையத் தளத்தின் குற்றச்சாட்டுகள் அபத்தமானவை : அமைச்சர் சண்முகம்

சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், States Times Review இணையத் தளத்தின் குற்றச்சாட்டுகளை அபத்தமானவை எனக் கூறிச் சாடியுள்ளார்.

1MDB நிதி மோசடி தொடர்பில் சிங்கப்பூர் நாணய வாரியம் அதிக கவனத்துடன் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த சர்ச்சையில் சம்பந்தப்பட்ட 10 நாடுகளில், சிங்கப்பூரில் மட்டுமே கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட 5 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பதை அமைச்சர் சுட்டினார்.

அந்த மோசடியில் சம்பந்தப்பட்ட மற்ற சந்தேக நபர்கள் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு முதல், மலேசிய அதிகாரிகளுக்குத் தேவையான தகவல்களை சிங்கப்பூர் வழங்கி வருவதாகக் கூறிய திரு. சண்முகம், அதை மலேசியா ஒப்புக்கொண்டுள்ளதாகச் சொன்னார்.

தகவல்களை முறையாக சரிபார்ப்பதன் மூலம் States Times Review இணையத் தளம் வெளியிட்ட கட்டுரையில் உள்ள தகவல்கள் "தவறு" என்பதை எளிதில் உறுதிசெய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.

பிரதமரின் நற்பெயரையும், சிங்கப்பூரின் செல்வாக்கையும் கீழறுக்கும் நோக்கில் அந்தத் தகவல்கள் அமைந்துள்ளன.

அந்தக் கட்டுரையை எழுதியவர்கள் அதை அறிந்திருந்தும், வேண்டுமென்றே அதை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அவ்வளவு பிரபலமில்லாத இணையத் தளங்களில் அத்தகைய பொய்த் தகவல்கள் முதலில் வெளியிடப்படுவது வழக்கம்.

பின்னர் அவை மற்ற முன்னணி ஊடகங்களில் உண்மையான தகவல்களைப்போல் வெளியிடப்படுகின்றன என்றார் திரு. சண்முகம்.

மற்ற நாடுகளிலும் அந்த உத்தி கையாளப்படுவதாக அவர் சொன்னார்.

அந்தக் கட்டுரையின் உத்தேச நோக்கம் குறித்துக் கேட்கப்பட்டபோது, அதுபற்றிக் கூறும் நிலையில் தாம் இல்லையெனக் குறிப்பிட்ட அமைச்சர், முறையான புலனாய்வு நடைபெறட்டும் என்றார்.  

Top