Images
  • mot
    (படம்:  AFP/Roslan Rahman)

கடல் எல்லை விவாதம் குறித்து இரு நாடுகளும் சந்தித்துப் பேசவேண்டும்: மலேசியா

சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் இடையிலான கடல் எல்லை பற்றிய விவாதம் குறித்து இரு தரப்பும் சந்திந்துப் பேசவேண்டும் என்று மலேசியா பரிந்துரைத்துள்ளது.

இருதரப்பு உறவுகளைக் கட்டிக்காக்கும் பொருட்டு, கடல் எல்லை விவகாரம் குறித்து ஆக்ககரமான முறையில் கலந்துரையாடத் தயாராக இருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு நேற்று கூறியிருந்தது.

இருப்பினும், விவாதத்திற்குரிய கடற்பகுதிக்குள் சிங்கப்பூரும் மலேசியாவும் தங்களது கப்பல்களை அனுப்பவேண்டாம் என்ற மலேசியாவின் பரிந்துரையை சிங்கப்பூர் ஏற்க மறுப்பதாக அறிக்கை குறிப்பிட்டது.

நேற்று நள்ளிரவிலிருந்து கப்பல்களை அனுப்பவேண்டாம் என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லா பரிந்துரைத்திருந்தார்.

எல்லைப் பகுதிகளைப் பற்றி இரு நாடுகளும் முன்வைத்த கருத்துகளின் தொடர்பில் நடுநிலையாக நடந்துகொள்ள அத்தகைய நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று அவர் கோரினார்.

மேலும் எல்லைகளைப் பற்றிய விவாதத்திற்குத் தீர்வு காணும் நோக்கில் இம்மாத மத்தியில் சிங்கப்பூருடன் சந்திப்பை நடத்த மலேசியா தயாராக உள்ளதென்று அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவிற்கான சிங்கப்பூர்த் தூதரின் மூலம் செய்தி அனுப்பப்பட்டது.

முன்னதாக, மலேசிய அரசாங்கக் கப்பல்கள் சிங்கப்பூர் நீர்ப் பகுதிக்குள் மீண்டும், மீண்டும் அத்துமீறி நுழைந்ததாக, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், மலேசிய வெளியுறவு அமைச்சரிடம் கூறியிருந்தார்.

அது சிங்கப்பூரின் அரசுரிமையை மீறும் நடவடிக்கை என்று டாக்டர் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டிருந்தார்.

Top