Images
  • Khaw Boon Wan
    படம்: Jeremy Long

சிங்கப்பூர் துவாஸுக்கு அருகே அதன் துறைமுக எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளது - அமைச்சர் காவ் பூன் வான்

துவாஸுக்கு அருகே சிங்கப்பூர் அதன் துறைமுக எல்லைகளை விரிவுபடுத்தியிருப்பதாகப் போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் கூறியிருக்கிறார்.

மலேசியாவின் அண்மைச் சினமூட்டும் நடவடிக்கைக்குப் பதிலடியாக அவ்வாறு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். சிங்கப்பூரின் அரசுரிமை மீறப்பட்டது மிகுந்த கவலையளிக்கிறது என்றும் அவர் சொன்னார்.

சிங்கப்பூர், அதன் நீர்ப் பகுதியில் ஊடுருவலை எதிர்த்து நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்றார் அவர்.

புதிய துவாஸ் துறைமுக எல்லைகள் உடனடியாக நடப்புக்கு வருகின்றன.

கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி, மலேசியா ஒருதலைப்பட்சமாக ஜொகூர் துறைமுக எல்லைகளில் மாற்றங்களை அறிவித்திருந்தது. மலேசிய மத்திய அரசாங்கத்தின் அரசிதழிலும் அது வெளியிடப்பட்டது.

அதன்பிறகு,  கடந்த இரு வாரங்களில், துவாஸுக்கு அருகே 14 முறை ஊடுருவல் நிகழ்ந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் அதற்கு 3 முறை ஆட்சேபம் தெரிவித்திருந்தது.

சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைப்புகள், தொடர்ந்து அந்த வட்டாரத்தில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் என்றும், அனுமதியற்ற நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என்றும் திரு. காவ் கூறினார்.


Top