Images
  • kevin
    (படம்:  Kevin Ong)

சிட்டி ஹால் ரயில் நிலையத்தின் மின்படிகளின் தகடுகளில் சிக்கி காயமடைந்த மாது

சிங்கப்பூர்: எப்போதும் போல மதிய உணவுக்குப் பின் அலுவகத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தனர் திரு. கேவின் ஓங், அவர் மனைவி சுக் லின்.

வெள்ளிக்கிழமை (14 செப்டம்பர்) சிட்டி ஹால் ரயில் நிலையத்தில் மின்படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் போது மின்படிகளின் ஓரமாக இருக்கும் தகடு பிளப்பதைக் கண்டார் திரு. ஓங். சில நொடிகளுக்குப் பிறகு, அருகிலிருந்த அவருடைய மனைவியின் அலறல் சத்தம் கேட்டது. மின்படிகளில் இருந்த தகடு அவருடைய காலைக் குத்திக் கழித்தது.

உடனடியாக அந்தத் தகடை எடுத்து மின்படியிலிருந்து இறங்கியப் பின், மற்றவர்கள் காயமடையாமல் இருக்க அதை ஓர் ஓரமாக வைத்தார் திரு ஓங்.

மனைவியின் காலிலிருந்து ரத்தம் வழிந்தது. வழிப்போக்கர் ஒருவர் மனைவியின் காயத்துக்கு முதலுதவி வழங்கியதாகக் கூறினார் திரு ஓங்.

சுமார் 8 செண்டிமீட்டர் நீளமான காயம், 4 செண்டிமீட்டர் அளவு ஆழமாகவும் இருந்தது. திருமதி ஓங், மவுண்ட் எலிசபெத் நொவீனா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்பட்டார். அவர் தற்போது மருத்துவ விடுப்பில் குணமடைந்து வருகிறார்.

மின்படியின் தகடு வெளியில் வந்ததால் இருவர் காயமடைந்ததாக SMRT நிறுவனம் உறுதி செய்துள்ளது. சம்பவத்துக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது நிறுவனம்.

பாதிக்கப்பட்ட மின்படிகள் பழுது நீக்கப்பட்ட பிறகு, அன்று மாலையே மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக SMRT கூறியுள்ளது.

சம்பவத்தைப் பற்றித் தொடர்ந்து விசாரிக்கப்படுவதாகவும், பெண்ணின் மருத்துவச் செலவுகள் SMRTஇடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Top