Images
  • yanmar 1
    (படம்:AFP/Ye Aung THU)

சிங்கப்பூரில் பயன்படுத்தப்படாத சைக்கிள்களால் பயனடைந்த மியன்மார் சிறார்

சிங்கப்பூரிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் Bike, Ofo, Mobike போன்ற சைக்கிள் பகிர்வு நிறுவனங்கள், தங்களது செயல்பாடுகளை நிறுத்தியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான சைக்கிள்களை இங்கே விட்டுச்சென்றன.

சேதமில்லாத சைக்கிள்கள், இப்படிப் பயன்படுத்தப்படாமல் வீணே கிடப்பதை ஒரு நல்வாய்ப்பாகப் பார்த்தார் தொழில்நுட்பர் மைக் தான் டுன் வின் (Mike Than Tun Win).


சொந்த நாடான மியன்மாரில் உள்ள பிள்ளைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாக அது அமைந்தது. 10,000 சைக்கிள்களை அவர் விலைகொடுத்து வாங்கி அந்தப் பிள்ளைகளுக்கு அனுப்பிவைத்தார்.

சைக்கிள்களை வாங்குவதற்கும் பிறகு மியன்மாருக்கு அவற்றை அனுப்புவதற்கும், அங்குள்ள பிள்ளைகளுக்குக் கொடுப்பதற்குமான செலவு என்ன தெரியுமா?

ஒரு சைக்கிளுக்கு 35 டாலர்!

மொத்தச் செலவில் பாதியை திரு. வின்னும் மீதத்தை ஆதராவளர்களும் செலுத்தினர்.


தொலைதூரம் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு அது இப்போது பயன்படுகிறது.

Lesswalk என்ற திட்டத்தின்கீழ் முதலில் 200 பிள்ளைகள் பயன்பெற்றுள்ளனர்.

இரண்டு மணி நேரத்துக்கு பத்து கிலோமீட்டர் தூரம் நடந்து பள்ளிக்குச் செல்லும் தே சூ வை (Thae Su Wai) அவர்களில் ஒருவர்.

இப்போது விரைவில் பள்ளியை அடையமுடிவதில் அவருக்கு ஆனந்தம். படிப்பதற்கும் நண்பர்களோடு விளையாடுவதற்கும் அதிக நேரம் ஒதுக்கலாம் என்று குதூகலமாகச் சொல்கிறார் 11 வயது தே.

அடுத்த ஐந்து ஆண்டுக்குள் மொத்தம் 100,000 சைக்கிள்களை அத்தகைய பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்பது 33 வயது திரு. வின்னின் இலக்கு.

 

Top