Images
  • Ng Eng Hen to China (1)
    (படம்: Koh Mui Fong/TODAY)

சிங்கப்பூர் கடல் நீரைவிட்டு மலேசியக் கப்பல்களை வெளியேற்றவேண்டும்: அமைச்சர் இங் எங் ஹென்

துவாஸ் துறைமுக எல்லையில் சில நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மலேசியக் கப்பல்களை சிங்கப்பூர் கடல் நீரைவிட்டு வெளியேறுமாறு தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் கடுமையாக எச்சரித்துள்ளார்.

நாட்டின் அரசுரிமையை அத்துமீறும் செயல் அது என அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர்க் கடல்பகுதியில் சில நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மலேசியக் கப்பல் இருநாட்டு எல்லையை வரையறுக்கும் செயலாகப் பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

துவாஸ் துறைமுக எல்லையை சிங்கப்பூர் விரிவுபடுத்தியுள்ளது.

அதில் மலேசியா தலையிடுவது தெரிந்தால் அதன்மீது நடவடிக்கை எடுக்க சிங்கப்பூர் தயங்காது என்று போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் முன்னதாகக் கூறியிருந்தார்.

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் அதனைத் தெரிவித்தார்.

அந்த மலேசியக் கப்பல் இம்மாதம் மூன்றாம் தேதியிலிருந்து சிங்கப்பூர்க் கடல்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது மொத்தம் 3 மலேசியக் கப்பல்கள் சிங்கப்பூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகத் திரு. காவ் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு வாரங்களில் சிங்கப்பூர் நீட்டித்துள்ள துவாஸ் துறைமுக எல்லையில் இதுவரை 14 முறை மலேசியக் கப்பல்கள் குறுக்கிட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.

சிங்கப்பூர்க் கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மலேசியக் கப்பல் ஒரு பராமரிப்புக் கப்பல் என்பதை உலகளாவிய கப்பல் காண்காணிப்பு அமைப்பான MarineTraffic உறுதிப்படுத்தியுள்ளது.  

Top