Images
  • F
    படம்: Today

சிங்கப்பூரில் பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு முதன்முறையாகக் கிருமித்தொற்று அபாயமிக்க இடங்கள் ஏதும் இல்லை

வெளிநாட்டு ஊழியர்களுக்கான Cassia@Penjuru தங்கும் விடுதி, கிருமித்தொற்று அபாயமிக்க இடங்களின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

பட்டியலில் இடம்பெற்றிருந்த இறுதி இடம் அது.

சிங்கப்பூரில் பிப்ரவரி 3 ஆம் தேதிக்குப் பிறகு முதல்முறையாக கிருமி தொற்றும் அபாயம் இருப்பதாக அடையாளம்காணப்பட்ட பகுதி ஏதுமில்லை.

முதல் கிருமித்தொற்றுச் சம்பவம் ஜனவரி 23 ஆம் தேதி பதிவுசெய்யப்பட்டதிலிருந்து, நாட்டில் நோய்ப்பரவல் எண்ணிக்கை 58,000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 28 பேர் உயிரிழந்தனர்.

பிப்ரவரி

பிப்ரவரி 4ஆம் தேதி Yong Thai Hang Medical Hall எனும் பாரம்பரியச் சீன மருந்துக் கடை கிருமித்தொற்று அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டது. அவ்வாறு அடையாளம்காணப்பட்ட முதல் இடம் அது. அதன் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் சீனச் சுற்றுப்பயணிகள்.

மூன்று நாளுக்குப் பிறகு உள்ளூரில் தொடர்பு இல்லாத கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டன. சம்பவங்கள் பின்னர் Life Church and Missions Singapore தேவாலயம், Grand Hyatt ஹோட்டல், Grace Assembly of God தேவாலயம் போன்ற இடங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டன.

மார்ச்
மார்ச் மாதத்தில் SAFRA Jurongஇல் நடந்த ஒன்றுகூடலுக்குப் பிறகு, அது கிருமி பரவும் அபாயமுள்ள மற்றோர் இடமாக அறிவிக்கப்பட்டது.

மார்ச் மாத இறுதிக்குள் பொங்கோலில் உள்ள S11 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி உட்பட, மற்ற தங்கும் விடுதிகளில் நோய்ப்பரவல் அடையாளம் காணப்பட்டது.

ஏப்ரல்
பின்னர் ஏப்ரலில் Lee Ah Mooi முதியோர் இல்லமும் நோய்ப்பரவல் இடமாக அறிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட்

ஆகஸ்ட் 19ஆம் தேதி தங்கும் விடுதிகளில் கிருமிப்பரவல் இல்லை என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் மூன்று நாள்களுக்குப் பின்னர் மீண்டும் அவற்றில் நோய்ப்பரவல் அடையாளம் காணப்பட்டது.

தங்கும் விடுதிகளில் வழக்கமான கிருமித்தொற்றுச் சோதனைகள் முடுக்கிவிடப்பட்டன. அதன்மூலம் 900 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன.

அக்டோபர்
அன்றாட நோய்த்தொற்றுச் சம்பவங்கள் குறைந்து வந்த வேளையில் அக்டோபர் 13 ஆம் தேதி, 6 மாதங்களில் முதல் முறையாக தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை.

அடுத்து வந்த வாரங்களில் சில நாள்களில் யாரும் பாதிக்கப்படவில்லை; சில நாள்களில் ஓரிரு சம்பவங்கள் பதிவாயின. 

Top