Images
  • df
    Bernama

உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் குவிக்க அவசியமில்லை: தேசிய வளர்ச்சி அமைச்சர்

உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் குவிக்க அவசியமில்லை என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) கூறியுள்ளார்.

நேற்று COVID-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டதால், மக்களிடையே பொருள்களின் இருப்பு குறித்த அச்சம் எழுந்திருக்கலாம்; தேவைக்கு அதிகமான பொருள்களை வாங்க முனைந்திருக்கலாம்;

இருப்பினும், அதற்கு அவசியமில்லை என்றும், இருப்பில் தடைகள் எழும் சூழ்நிலைக்குப் பல ஆண்டாய் அரசாங்கம் தயாராகி வருவதாகவும் அவர் கூறினார்.

பல்வேறு நாடுகளிலிருந்து பொருள்களைத் தருவிப்பது, உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பது, அத்தியாவசியமான பொருள்களைச் சேகரிப்பது ஆகியவற்றின் வழி தயராகி வருவதை அவர் சுட்டினார்.

மக்கள் பொருள்களைத் தேவையில்லாமல் வாங்கிக் குவிப்பது, பேரங்காடிகளின் பொருள் இருப்பைக் கணிசமாகக் குறைக்கச் செய்யும்.

பொருள் இருப்பு இல்லாவிட்டால், தேவைப்படுவோர் , பீதி அடைவர்; தேவையின்றி வாங்கும் போக்கை அது மேலும் அதிகரிக்கும் என்றும் அமைச்சர் வோங் தெரிவித்தார்.

மலேசியாவிலிருந்து அத்தியாவசியப் பொருள்களின் போக்குவரத்து பெரும்பாலும் வழக்கம் போலத் தொடர்கிறது.

இருப்பினும், தடைகள் ஏற்படும் சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இரு நாடுகளுக்கு இடையில் மக்கள், பொருள், அத்தியாவசியச் சேவைகள் ஆகியவற்றின் போக்குவரத்து மீதான தாக்கத்தைக் குறைக்க, சிறப்புத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.

சிங்கப்பூர்- மலேசிய சிறப்புப் பணிக்குழு, அதன் தொடர்பில் கலந்துரையாடிவருகிறது என்று அமைச்சர் வோங் கூறினார்.

மலேசியாவில் விதிக்கப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்படும் என்று பிரதமர் முஹிதீன் யாசின் இன்று அறிவித்ததை அவர் சுட்டினார்.

Top