Images
  • ncmp
    (படம்: NTUC, NUS) 

நாடாளுமன்ற நியமன உறுப்பினர் பதவிக்கு முன்மொழியப்பட்ட இருவர்

தேசியத் தொழிற்சங்கங் காங்கிரஸும் சுற்றுப்புற ஆர்வலர்கள் சிலரும் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் பதவிக்கு இருவரை முன்மொழிந்துள்ளனர்.

தேசியத் தொழிற்சங்கங் காங்கிரஸ் அதன் துணைத் தலைவர் அப்துல் சமாட் அப்துல் வஹாப்பை (Abdul Samad Abdul Wahab) நாடாளுமன்ற நியமன உறுப்பினர் பதவிக்கு முன்மொழிந்துள்ளது.

48 வயதாகும் அவர், UPAGE எனப்படும் மின்சாரம், எரிவாயுத் துறை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றுகிறார்.

துறைசார்ந்த ஊழியர்களின் போனஸ், சம்பள உயர்வு, பயிற்சி நிதி ஆகியவை தொடர்பில் எரிசக்திச் சந்தை ஆணையம் அறிவித்த சந்தை மேம்பாடு, மீள்திறன் திட்டத்தில் திரு. சமது முக்கியப் பங்காற்றியுள்ளார்.

நிறுவனப் பயிற்சிக் குழுக்களை அமைப்பதிலும் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்று காங்கிரஸ் கூறியது.

திரு. சமது எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு, சக ஊழியர்களுக்குச் சிறப்பாகத் தொண்டாற்றும் ஆற்றல் மிக்கவர் என்று காங்கிரஸின் தலைவர் இங் சீ மெங் (Ng Chee Meng) தமது Facebook பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வேளையில்,சுற்றுப்புற ஆர்வலர்கள், ஆய்வு விஞ்ஞானி டாக்டர் ஏண்டி அங்கை (Andie Ang) நாடாளுமன்ற நியமன உறுப்பினர் பதவிக்குப் பரிந்துரைத்துள்ளனர்.

சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பக நிதியின் கீழ், அவர் ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

நாடாளுமன்ற நாயகரின் தலைமையில் செயல்படும் 8 பேர் கொண்ட சிறப்புத் தேர்வுக்குழு நாடாளுமன்ற நியமன உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும்.

பின்னர் அதிபர், இரண்டரை ஆண்டுத் தவணைக்காலத்துக்குப் பணியாற்ற அவர்களை நியமிப்பார்.

நியமன உறுப்பினர்களை முன்மொழியும் விண்ணப்பங்கள் இம்மாதம் 23ஆம் தேதி மாலை நாலரை மணிக்குள் சமர்ப்பிக்கப்படவேண்டும். 

Top