Images
  • ns

முழுமையான சுகாதாரப் பரிசோதனைகள் இருந்தாலும் மனநலப் பிரச்சினைகளால் தவிக்கும் சில தேசிய சேவையாளர்கள்

சிங்கப்பூர்: தேசிய சேவைக்குச் செல்லும் இளம் சிங்கப்பூரர்களின் மனநல, உடல்நலப் பிரச்சினைகளை அடையாளம் காண சிங்கப்பூர் ஆயுதப் படை போதிய நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறது.

எனினும், சிலர் அதில் முறையாக அடையாளம் காணப்படாமல் தேசிய சேவையின்போது இன்னல்களைச் சந்திக்கின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளில் தேசிய சேவையில் சேருவோரில் சுமார் 4 விழுக்காட்டினர் மனநலப் பிரச்சினைகளின் காரணமாகக் கடுமையான பயிற்சிகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் அந்தத் தகவலைக் கூறியிருந்தார்.

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 15,000 இளையர்கள் தேசிய சேவையில் சேர்கிறார்கள்.

தேசிய சேவைக்குச் செல்வதற்கு முன் இளம் ஆடவர்களுக்கு முழுமையான சுகாதாரப் பரிசோதனை செய்யப்படுகிறது.

அப்போது அவர்களுக்கு ஏதேனும் மனநலப் பிரச்சினைகள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்தும் பிரமாணப் பத்திரத்தை, ஆடவரும் அவரது பெற்றோரும் கையெழுத்திட்டு ஒப்படைக்கவேண்டும்.

தற்காப்பு அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து, பொது மருத்துவமனைகள் வழியாகவும் மனநலப் பிரச்சினையுள்ள இளையர்களை அடையாளம் காண முயல்கின்றன.

இளையர்களுக்குக் கடுமையான சில மனநலப் பிரச்சினைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள், தேசிய சேவை புரிவதிலிருந்து விலக்கிவைக்கப்படுவர்.

2005ஆம் அண்டிலிருந்து 2015 வரை அவ்வாறு ஆண்டுக்கு சுமார் 400 பேருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு துல்லியமான மதிப்பீட்டு முறையும் 100 விழுக்காடு சரியானதாக இருக்குமென உத்தரவாதமளிக்க முடியாது என்கிறார்,
Gleneagles மருத்துவமனையின் மனநல மருத்துவர் டாக்டர் லிம் பூன் லெங்.

தேசிய சேவை ஆற்றவிருக்கும் இளையர்கள், அவர்களின் பெற்றோர் ஆகியோரின் ஒத்துழைப்பைப் பொறுத்தது அது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய சேவைக்குப் பதிவு செய்யும் இளையர்களில் சிலர் தங்களுக்கு உள்ள மனநலப் பிரச்சினைகளைப் பிரகடனம் செய்யாமற் போவதுண்டு.

அல்லது சிலருக்கு அப்படி ஒரு பிரச்சினை இருப்பதே தேசிய சேவை ஆற்றும்போதுதான் தெரியவரும்.

இதன் காரணமாக, இளையர்கள் சிலர், தேசிய சேவையின்போது மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

அப்படிப்பட்ட சூழலில், படைத்தலைவர்கள், தேசிய சேவையாளர்களின் மனநலத்தை அவ்வப்போது கவனிக்கக் கற்றுத்தரப்படுகிறது.

மனநலப் பிரச்சினைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேச ஆடவர்கள் தயங்குவதாலும் சிலர் தனிமையில் தவிக்கின்றனர்.

இருப்பினும், தேசிய சேவையாளர்களின் மனநலப் பிரச்சினைகளை மேலும் துல்லியமாக அடையாளம் காணத் தனது செயல்முறைகளை மேம்படுத்தி வருவதாகத் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

Top