Images
  • Nuisance Calls
    (படம்: Jalelah Abu Baker/ CNA)

999க்குத் தேவையின்றி விடுக்கப்படும் அழைப்புகளால், உண்மையில் உதவி தேவைப்படுவோருக்குப் பாதிப்பு


சிங்கப்பூர்க் காவல்துறையின் அவசரகால உதவி அழைப்புக்கான 999 எனும் தொலைபேசி எண்ணுக்கு வரும் அழைப்புகளில் பாதிக்கும்-மேலானவை, தொந்தரவு தரும் அழைப்புகள் அல்லது காவல்துறையின் தலையீடு தேவையற்றவை.

இந்த ஆண்டின் முற்பாதியில் பதிவான 683,000க்கும் அதிகமான அழைப்புகளில், 50 விழுக்காட்டுக்கும் அதிகமானவை அந்த வகையைச் சேர்ந்தவை.

பின்னிரவில், டாக்ஸி பதிவு செய்துதரக் கோரியும், டாக்ஸி எதுவும் நிற்கவில்லை என்று புகார்கூறியும் வரும் அழைப்புகளும் அவற்றில் அடங்கும்.

சில நேரங்களில், மேல் வீட்டில் உலர்த்தப்பட்ட துணிகளில் இருந்து தண்ணீர் சொட்டுவதாகக்கூட அழைப்புகள் பதிவாகியிருப்பதாகத் தெரிகிறது.

சென்ற ஆண்டு செய்யப்பட்ட ஒரு மில்லியன் தொலைபேசி அழைப்புகளிலும், 58 விழுக்காட்டுக்கும் அதிகமானவை காவல்துறைக்குத் தொடர்பில்லாதவை எனக் கூறப்பட்டது.

தொந்தரவு தரும் அழைப்புகள் பொன்னான நேரத்தை வீணாக்குவதாக அவசர உதவி எண்ணுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் அளிக்கும் கட்டுப்பாட்டு அறையின் பொறுப்பில் உள்ள காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் ராஜா முகமது ஷஹிர் ராஜா முகமது சயது, சேனல் நியூஸ்ஏஷியாவிடம் தெரிவித்தார்.

இருந்தபோதும், ஒவ்வொரு முறை அழைப்பு வரும்போதும், அது தேவையற்றதா, உண்மையில் உதவிகோரும் அழைப்பா என்று தெரியாது என்பதால், எல்லா அழைப்புகளுக்குமே அதிகபட்ச முக்கியத்துவம் தரப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மீண்டும், மீண்டும் தேவையின்றி 999 என்ற எண்ணை அழைப்போர், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்பதை அவர் நினைவுபடுத்தினார்.

Top