Images
  • poly
    (படம்:TODAY)

2020இலிருந்து NUS, NTUஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும் பலதுறைத் தொழிற்கல்லூரிப் பட்டதாரிகளின் சாதாரண நிலை மதிப்பெண் கவனத்தில் கொள்ளப்படாது

2020ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், தேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும்
பலதுறைத் தொழிற்கல்லூரிப் பட்டதாரிகளின் சாதாரண நிலை மதிப்பெண் கவனத்தில் கொள்ளப்படாது.

குறிப்பிட்ட சில பாடத்திட்டங்களுக்கு மட்டும் அவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

பல்கலைக் கழகத்துக்குத் தகுதி பெற சாதாரண நிலைத் தேர்வு முடிவுகளில் 20 விழுக்காடு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்ற நிபந்தனையை கல்வி அமைச்சு நீக்கியிருக்கிறது.

பலதுறைத் தொழிற்கல்லூரியில் மாணவர்கள் பெற்றிருக்கும் திறன்களையும் அறிவாற்றலையும் மேலும் சிறந்த முறையில் பிரதிபலிக்கும் வண்ணம் அவர்களின் அண்மை முடிவுகள் அமைந்திருக்கும் என்று கல்விக்கான இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா சொன்னார்.

பள்ளியின் துணைப்பாட நடவடிக்கைகளுக்கு அப்பால் சிறந்து விளங்கக்கூடிய மாணவர்களையும் தனித்திறன் கொண்டவர்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள இந்த மாற்றம் வாய்ப்பளிக்கிறது.

உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு படிப்பில் சிறந்துவிளங்கியோரின் திறனை அங்கீகரிக்கவும் பிறருக்கு அதிக வாய்ப்புகள் வழங்கவும் இது கைகொடுக்கும் என்று நம்புவதாகக் குமாரி இந்திராணி கூறினார்.

2020ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைக்கு முன்னதாக தேசியப் பல்கலைக் கழகமும் தேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் மேல் விவரங்களை வெளியிடும்.
 

Top