Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

எதிர்வரும் தேர்தல் குறித்த அறிவிப்பு - எதிர்க்கட்சிகள் கருத்து

பிரதமர் லீ சியென் லூங் எதிர்வரும் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து, சில எதிர்க்கட்சிகள் அது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளன.

வாசிப்புநேரம் -
எதிர்வரும் தேர்தல் குறித்த அறிவிப்பு - எதிர்க்கட்சிகள் கருத்து

(கோப்புப் படம்: Reuters/Edgar Su)

பிரதமர் லீ சியென் லூங் எதிர்வரும் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து, சில எதிர்க்கட்சிகள் அது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளன.

வேட்புமனுத் தாக்கல் இம்மாதம் 30-ஆம் தேதி நடைபெறும் என்றும் வாக்களிப்பு தினம் அடுத்த மாதம் 10-ஆம் தேதி அன்று இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

பாட்டாளிக் கட்சி

அது தனது Facebook பக்கத்தில் "பொதுத் தேர்தல் 2020 - கூடிய விரைவில் வருகிறது" என்று பதிவிட்டது.

அத்துடன், பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில், கட்சியைச் சேர்ந்த 12 பேர் இடம்பெற்றனர்.

அவர்களில் கட்சித் தலைவர் சில்வியா லிம், தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் ஆகியோரும் அடங்குவர்.

தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் முன்னாள் தேர்தல் வேட்பாளர் நிக்கோல் சியாவும் அதில் இருந்தார்.

இருப்பினும், முன்னாள் தலைவர் லாவ் தியா கியாங்கும் சில முக்கிய உறுப்பினர்களும் அதில் இடம்பெறவில்லை.

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சித் தலைவர் சீ சூன் ஜுவான் தாம் புக்கிட் பாத்தோக் தனித்தொகுதியில் போட்டியிடவிருப்பதாக Facebook-இல் பதிவிட்டார்.

தமக்கு ஆதரவளிக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூர் மக்கள் கட்சி

கட்சி பொத்தோங் பாசிர் தனித்தொகுதியிலும் பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதியிலும் போட்டியிடவிருப்பதாக முன்னர் அறிவித்திருந்தது.

பொத்தோங் பாசிரில், மக்களின் விருப்பங்களைக் கேட்டறியும் நடவடிக்கைகள் மூவாண்டுக்கு முன்னரே தொடங்கப்பட்டதாகவும், தொகுதியில் போட்டியிட ஆர்வமாக இருப்பதாகவும் கட்சி குறிப்பிட்டது.

COVID-19 சூழலைக் கருத்தில் கொண்டு, பீஷான்-தோ பாயோவில், எவ்வளவு குடியிருப்பாளர்களை எட்டமுடியுமோ, கட்சி எட்ட முனையும் என்றும் கூறப்பட்டது.

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி

கட்சி 8 தொகுதிகளில் போட்டியிடவிருப்பதாக முன்னர் அறிவித்திருந்தது.

தலைமைச் செயலாளர் டான் செங் போக்கின் தலைமையில், அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் சேவையாற்றத் தயாராகவுள்ளதாக சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, அதன் Facebook பதிவில் குறிப்பிட்டது.

தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான பிரதமர் லீயின் முடிவைக் கட்சி வரவேற்றது.

பொதுத்தேர்தல், COVID-19 சூழலை எதிர்கொள்ளக்கூடிய அரசாங்கத்தை நிர்ணயிக்கும் ஒன்று மட்டுமல்ல, பொறுப்பு, வெளிப்படைத்தன்மை, நேர்மை, சிங்கப்பூரர்களின் நலனுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளும் ஓர் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு என்று கட்சி அதன் Facebook பக்கத்தில் கூறியது.

மக்கள் சக்திக் கட்சி

வெளிநாடுகளில் வசிக்கும் உத்தேச வேட்பாளர்கள் சிங்கப்பூருக்குத் திரும்பும் வரை வேட்புமனுத் தாக்கல் தினம் ஒத்திவைக்கப்படவேண்டும் என்று கட்சி தலைவர் கோ மெங் செங் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலின்போது, குடிமக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க வேண்டும்; அதனால், உத்தேச வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கலில் பங்கேற்க இன்று முதல் குறைந்தது 14 நாள்கள் அளிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்